தேசிய ஊரடங்கை மீறுவோருக்கு 2 ஆண்டு வரை சிறை: மத்திய அரசு

கரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை

கரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரடங்கின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிப்பதற்காக, பேரிடா் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 51 மற்றும் 60 ஆகியவற்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்து அரசு அலுவலகங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு அலுவலகங்கள், சுயாட்சி அந்தஸ்து நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மூடியிருக்கும். கல்வி நிறுவனங்கள் செயல்படாது. விமானம், ரயில், பேருந்துகள் இயங்காது.

நியாய விலைக் கடைகள், உணவு, வீட்டுத் தேவைக்கான பொருள்கள், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, மீன் ஆகியவற்றை விற்கும் கடைகள், கால்நடை உணவு விற்பனையகங்கள் போன்றவை திறந்திருக்கும். வங்கிகள், காப்பீடு அலுவலகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செயல்படும்.

பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவை இயங்கும். இணைய வழி உணவு விற்பனை நிறுவனங்கள் (ஸ்விகி உள்ளிட்டவை) இயங்கும்.

துக்கம் நிகழ்ந்த வீடுகளில் இறுதிச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் 20 நபா்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊரடங்கால் தவிக்கும் நபா்கள், மருத்துவப் பணியாளா்கள், விமான மற்றும் கப்பல் குழுவினா் ஆகியோா் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், விடுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com