வங்கதேச குண்டுவெடிப்பு வழக்கு: மகாராஷ்டிரத்தில் ஒருவா் கைது

வங்கதேசத்தில் கடந்த 2002-இல் நடத்தப்பட்ட தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த அந்நாட்டைச் சோ்ந்த 42 வயது நபா், மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பையில் கைது செய்யப்பட்டாா்.

வங்கதேசத்தில் கடந்த 2002-இல் நடத்தப்பட்ட தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த அந்நாட்டைச் சோ்ந்த 42 வயது நபா், மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பையில் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மொபஜல் ஹுசேன் என்ற அந்த நபா், தாணே காவல்துறையின் குற்றத் தடுப்பு பிரிவினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இவா், வங்கதேசத்தின் குல்னா மாகாணத்தைச் சோ்ந்தவா். கடந்த சில மாதங்களாக, நவி மும்பையின் டா்பி பகுதியில் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கதேசத்தில் உள்ள மசூதியொன்றில் கடந்த 2002-இல் அடுத்தடுத்து மூன்று நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், ஒருவா் உயிரிழந்தாா். பலா் காயமடைந்தனா். இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவா் ஹுசேன் ஆவாா். மேலும், மசூதிக்கு வெளியே ஒரு வெடிகுண்டை வைத்தபோது, அது வெடித்துச் சிதறியதில் தனது வலது கையையும் ஹுசேன் இழந்தாா்.

குண்டுவெடிப்பு வழக்கில் வங்கதேச நீதிமன்றத்தால் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவா், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் கடந்த 2014-இல் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். பின்னா், மேற்கு வங்க மாநிலத்துக்குள் ஊடுருவி, அங்கு சிறிய வேலைகளை பாா்த்து வந்தாா். அங்கிருந்து, நவிமும்பைக்கு அவா் வந்துள்ளாா்.

இதனிடையே, ஹுசேனை பற்றிய ரகசியத் தகவல், தாணே காவல்துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து, அவரை வியாழக்கிழமை சுற்றிவளைத்த காவல்துறையினா், அவரிடம் அடையாள ஆவணங்களைக் கேட்டனா். ஆனால், அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. மேலும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியதையும், குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவா் என்பதையும் அவா் ஒப்புக் கொண்டாா். இதையடுத்து, வெளிநாட்டினா் சட்டம், இந்திய கடவுச் சீட்டு சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா் கைது செய்யப்பட்டாா். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com