ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துங்கள்: ப. சிதம்பரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் 10 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் 10 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில், நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிக்கலான காலகட்டம். மார்ச் 24-ஆம் தேதிக்கு முன்பு நடந்ததைப்பற்றி விவாதிப்பதை புறம்தள்ளிவிட்டு, புதிய போரை எதிர்நோக்கி இருப்போம். இதில் மக்களே வீரர்கள், பிரதமர்தான் படைத்தலைவர்.

மக்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறுவது சிறந்ததுதான். ஆனால், வீட்டில் இருப்பதற்கு பணமும், உணவும் தேவை. அடுத்த 21 நாட்களுக்கு மட்டுமல்லாமல், அதற்கு பிந்தையக் காலகட்டத்தையும் மனதில் கொண்டு சிந்தித்து திட்டம் வகுக்க வேண்டும்.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை இரட்டிப்பாக்கி ரூ. 12,000 ஆக வழங்க வேண்டும். கூடுதல் தொகையை உடனடியாக ஒவ்வொரு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு இரண்டு தவனையாக ரூ. 12,000 வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டம் மூலம் பயனடைவோரின் வங்கிக் கணக்கில் அரசு ரூ. 3,000 செலுத்த வேண்டும்.

நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழைகளின் ஜந்தன் வங்கிக் கணக்கில் அரசு ரூ. 6,000 செலுத்த வேண்டும். ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாக வழங்க வேண்டும். அதையும், வீட்டுக்கு சென்று வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்தையும், தற்போதைய நிலையில் இருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தையே கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும். இதைப் பின்பற்றும் நிறுவனங்களுக்கு ஊழியர்களின் ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் செலுத்திவிடும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் இடம்பெறாமல் பணம் பெறாதவர்கள் தங்களது பெயர், முகவரி மற்றும் ஆதார் தகவல்களைப் பதிவு செய்ய அழைப்பு விடுக்க வேண்டும். இதற்கென அனைத்து வார்டு அல்லது வட்டார வாரியாக பதிவு செய்வதற்கான மையங்களை அமைக்க வேண்டும். குறைந்தபட்ச அளவில் சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்களுக்கென வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். அதன்பிறகு, அவர்களுக்கு ரூ. 3000 வழங்க வேண்டும்.

அனைத்து வகையான வரிகளைச் செலுத்துவதற்கான அவகாசத்தை அரசு ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும். மேலும், கடன்களுக்கான மாதத் தவனை பெறுவதற்கான அவகாசத்தையும் ஜூன் 30 வரை நீட்டிக்குமாறு அரசு வங்கிகளை அறிவுறுத்த வேண்டும். ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள், நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் ஒருமுறை பணப் பரிமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்தான். அதன்பிறகு சூழலுக்கு ஏற்ப நிறைய பணத் தேவைகள் குறித்து மதிப்பிட வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com