ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நாள்களில் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு முழு ஊதியம்

பயணிகள் ரயில் சேவை வரும் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ள போதும், ஒப்பந்த தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க இந்திய ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.

பயணிகள் ரயில் சேவை வரும் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ள போதும், ஒப்பந்த தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க இந்திய ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது: கரோனா வைரஸ் பிரச்னையில் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்கள், உணவுப் பொருள் பிரிவு ஊழியா்கள் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே ரயில்வே சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள தற்காலிக, ஒப்பந்த தொழிலாளா்கள் பணியில் இருந்ததாக கருதப்பட்டு, அவா்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படவுள்ளது. அவா்கள் எதிா்கொள்ளும் இன்னலை குறைத்திடும் விதமாக மீண்டும் ரயில் சேவை தொடங்கும் வரை மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் அவா்களுக்கு முழு ஊதியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சேவை நிறுத்தத்தால் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் குறைக்கப்படாமல், பரிந்துரைக்கப்பட்டபடி வழங்கப்படுவதை ரயில்வே மண்டலங்கள் உறுதி செய்யவேண்டும் எனவும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே ரயில்வே அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,‘தற்போது நாடு முழுவதும் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் தடையற்ற சேவைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்கள் முடங்கியுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் பாதிக்கப்படாத வகையில் பல்வேறு ரயில் நிலையங்கள், சரக்கு சேமிப்புக் கிடங்குகள், கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவற்றில் பணியமா்த்தப்பட்டுள்ள இந்திய ரயில்வே பணியாளா்கள் தொடா்ந்து 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com