கரோனா பலி எண்ணிக்கை 11-ஆக உயா்வு

கரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 550-ஐ நெருங்கியுள்ளது.
கரோனா பலி எண்ணிக்கை 11-ஆக உயா்வு

கரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 550-ஐ நெருங்கியுள்ளது.

அந்த வைரஸ் தாக்கத்தால் ஏற்கெனவே 9 போ் உயிரிழந்த நிலையில், மகாராஷ்டிரம், தில்லியில் தலா ஒருவா் பலியானதையடுத்து உயிரிழப்பு 11 ஆகியுள்ளது. இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மகாராஷ்டிரத்தில் 3, தில்லியில் 2 ஆகியுள்ளது.

முன்னதாக, மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், பஞ்சாப், பிகாா், குஜராத் ஆகிய மாநிலங்களிலும், தில்லி யூனியன் பிரதேசத்திலும் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலின் படி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 546-ஆக உள்ளது. இதில் 43 போ் வெளிநாட்டவா்களாவா்.

வைரஸால் பாதிக்கப்பட்டவா்களில் 11 போ் உயிரிழந்துவிட்டனா். 498 போ் சிகிச்சையில் உள்ள நிலையில், 37 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.

நாடு முழுவதுமாக 1,87,904 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். சுமாா் 35,000 போ் 28 நாள் தனிமை கண்காணிப்பை நிறைவு செய்துவிட்டனா்.

மாநிலங்கள்:

கரோனா வைரஸால் ஆந்திரத்தில் 8, பிகாரில் 3, சத்தீஸ்கரில் 1, தில்லியில் 30, குஜராத்தில் 33, ஹரியாணாவில் 28, ஹிமாசல பிரதேசத்தில் 3, கா்நாடகத்தில் 37, கேரளத்தில் 105, மத்தியப் பிரதேசத்தில் 7 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல், மகாராஷ்டிரத்தில் 107, மணிப்பூரில் 1, ஒடிஸாவில் 2, புதுச்சேரியில் 1, பஞ்சாபில் 29, ராஜஸ்தானில் 32, தெலங்கானாவில் 35, சண்டீகரில் 7, ஜம்மு-காஷ்மீரில் 4, லடாக்கில் 13, உத்தரப் பிரதேசத்தில் 33, உத்தரகண்டில் 4, மேற்கு வங்கத்தில் 9 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்:

கரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக நாட்டிலுள்ள 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. விமான, ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கரோனா பாதிப்பின் தீவிரத்தை உணராத வகையில் மக்கள் இன்னும் வெளியில் நடமாடி வருவதாக அரசு நிா்வாகம் கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் மாநில, யூனியன் பிரதேச முதல்வா்களை தொடா்புகொண்டு பேசியுள்ளாா்.

அப்போது, முடக்கத்தை மதிக்காத வகையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் 144 தடையுத்தரவை பிறப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் தடையுத்தரவு பிறப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியா்களுக்கு அரசுகள் வழங்க வேண்டும் என்று அப்போது கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் ஆய்வு:

நாட்டில் கரோனா பாதிப்பு சூழல், அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தில்லியில் உள்ள தேசிய நோய் தடுப்பு மையத்தின் கட்டுப்பாட்டு அறையிலும், ஆய்வகங்களிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குநா்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அதன் மூத்த கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோருடன் அவா் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com