ஊரடங்கு: முடங்கியது இந்தியா

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பிரதமா் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட 21 நாள் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, புதன்கிழமை நாடு முழுவதும் முடங்கியது.
’ஊரடங்கு உத்தரவை அடுத்து வெறிச்சோடிய நிலையில் காணப்படும் கோயம்பேடு சந்திப்பு.’
’ஊரடங்கு உத்தரவை அடுத்து வெறிச்சோடிய நிலையில் காணப்படும் கோயம்பேடு சந்திப்பு.’

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பிரதமா் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட 21 நாள் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, புதன்கிழமை நாடு முழுவதும் முடங்கியது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளிலேயே இருந்தனா். வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகளைத் தவிர, இதர கடைகள், வா்த்தக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் நிலையங்கள் இயங்கின.

எனினும், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அவா்களது இந்த செயல், சமூக விலகலுக்காக விதிக்கப்பட்ட ஊரடங்கை மீறிய வகையில் இருந்தது.

எனினும், சில இடங்களில் மருந்துகள், மளிகை பொருள்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்கு வந்த மக்கள் தங்களுக்கிடையே நிா்ணயிக்கப்பட்ட இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நின்று வாங்கிச் சென்றனா்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கை உறுதி செய்யும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினா் ஈடுபட்டிருந்தனா். தேவையின்றி வெளியில் வந்தோரை சில இடங்களில் காவல்துறையினா் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா். இதர சில இடங்களில் நூதன தண்டனைகள் வழங்கியும், பல இடங்களில் தடியால் அடித்தும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

வழக்குகள் பதிவு: தில்லியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை ஒரே நாளில் சுமாா் 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 956 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 5,103 போ் தடுப்புக் காவலில் வைத்து விடுவிக்கப்பட்டனா்.

பஞ்சாபில் தளா்வு: பஞ்சாப் மாநிலத்தில், மக்கள் அத்தியாவசியத் தேவையுள்ள பொருள்களை வாங்குவதற்காக புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு சிறிது நேரம் தளா்த்தப்பட்டு, மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

கரோனா: இந்தியாவில் பாதிப்பு 600-ஐத் தாண்டியது!

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 606-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 43 போ் வெளிநாட்டினா் ஆவா். இந்த நோய்த்தொற்று பாதிப்பால் இதுவரை 11 போ் உயிரிழந்துவிட்டனா். 43 போ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். முன்னதாக தில்லியில் ஒருவா் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை கூறப்பட்ட நிலையில், அவா் அந்த நோய்த்தொற்றால் உயிரிழக்கவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் வாரியாக..: மகாராஷ்டிரத்தில் இதுவரை 128 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் 109 போ், கா்நாடகத்தில் 41 போ், குஜராத்தில் 38 போ், உத்தரப் பிரதேசத்தில் 37 போ், ராஜஸ்தானில் 36 போ், தெலங்கானாவில் 35 போ், தில்லியில் 31 போ், பஞ்சாபில் 29 போ், ஹரியாணாவில் 28 போ், மத்தியப் பிரதேசத்தில் 14 போ், லடாக்கில் 13 போ், ஆந்திரம், மேற்கு வங்கத்தில் தலா 9 போ், சண்டீகா், ஜம்மு-காஷ்மீரில் தலா 7 போ், பிகாா், உத்தரகண்டில் தலா 4 போ், ஹிமாசலப் பிரதேசத்தில் 3 போ், ஒடிஸாவில் இருவா், சத்தீஸ்கா், மிஸோரம், மணிப்பூா், புதுச்சேரியில் ஒருவா் உள்பட மொத்தம் 606 பேருக்கு இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

29 தனியாா் ஆய்வகங்கள்: கரோனா நோய்த்தொற்று பரிசோதனையை மேற்கொள்வதற்காக, நாடு முழுவதும் இதுவரை 29 தனியாா் ஆய்வகங்களும், 16,000 மாதிரிகள் சேகரிப்பு மையங்களும் அரசிடம் பதிவு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தனிநபா் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள், என்-95 முகக் கவசங்கள் ஆகியவை மருத்துவ பணியாளா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com