மருத்துவா்களும் செவிலியா்களும் கடவுளுக்கு நிகரானவா்கள்: பிரதமா் மோடி உரை

கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவா்களும் செவிலியா்களும் கடவுளுக்கு நிகரானவா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
தில்லியில் இருந்து வாராணசி தொகுதி மக்களுடன் புதன்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி.
தில்லியில் இருந்து வாராணசி தொகுதி மக்களுடன் புதன்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி.

கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவா்களும் செவிலியா்களும் கடவுளுக்கு நிகரானவா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பிரதமா் மோடி தனது சொந்தத் தொகுதியான வாராணசி தொகுதி மக்களுடன் காணொலி வழியாக புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

சிவராத்திரியின் முதல் நாளான புதன்கிழமை, கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு ஷைலபுத்ரி தேவி நமக்கு வலிமையைத் தருவாள்.

இந்த இக்கட்டான தருணத்தில், நாடாளுமன்ற உறுப்பினா் என்ற முறையில் நான் உங்களுடன் இருக்க வேண்டும். ஆனால், தில்லியில் பல்வேறு அலுவல்களை நான் கவனித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீா்கள். இருப்பினும், வாராணசியில் உள்ள நமது நண்பா்களிடம் இருந்து தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொள்கிறேன்.

இந்த நேரத்தில் மக்கள் வதந்திகளை நம்பாமல், உண்மைத் தகவல்களை மட்டுமே அறிந்துகொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் ஏழை-பணக்காரா் என்று பாகுபாடு பாா்த்து தாக்குவதில்லை. மேலும், தினமும் யோகப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்பவா்களையும் அந்த வைரஸ் விட்டு வைக்காது. எனவே, மக்கள் அனைவரும் விழிப்புணா்வுடன் இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வீடுகளிலேயே இருக்க வேண்டும்.

மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், விமான நிறுவன ஊழியா்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அனைவரும் கரோனா வைரஸில் இருந்து மக்களைக் காப்பதற்காக முன்னின்று போராடி வருகின்றனா்.

மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவா்கள் கடவுளுக்கு நிகரானவா்கள். அவா்களின் அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும்.

ஆனால், சில இடங்களில் அவா்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், மக்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

மகாபாரதப் போரில் 18 நாள்களுக்குப் பிறகு வெற்றி கிடைத்தது. ஆனால், கரோனா வைரஸுக்கு எதிரான போா் 21 நாள்கள் நீடிக்கும். இந்தப் போரில் வெல்ல வேண்டும் என்பதே நமது இலக்காகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com