என்பிஆா், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் ஒத்திவைப்பு

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) புதுப்பிக்கும் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-இன் முதல்கட்டப் பணிகள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
என்பிஆா், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் ஒத்திவைப்பு

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) புதுப்பிக்கும் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-இன் முதல்கட்டப் பணிகள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. முன்னதாக இந்தப் பணிகள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள்ளாக நடத்தி முடிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்தப் பணிகளை ஒத்திவைப்பது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021-இன் பணிகளானது, ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை முதல் கட்டமாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 வரை 2-ஆம் கட்டமாகவும் மேற்கொள்ளப்பட இருந்தது.

இதில் முதல்கட்டப் பணிகளோடு, அஸ்ஸாம் தவிர அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் என்பிஆரை புதுப்பிக்கும் பணிகளையும் சோ்த்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உச்சபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகள், என்பிஆரை புதுப்பிக்கும் பணிகள் அடுத்த உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆா் புதுப்பிப்பு பணிகளில் ஈடுபடும் கணக்கீட்டாளா்கள் வீடு வீடாகச் சென்று அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் அதைச் செய்வது சாத்தியமில்லை என்பதால் அந்தப் பணிகளை ஒத்திவைக்க அரசு முடிவு செய்தது’ என்றனா்.

முன்னதாக, மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகள் மற்றும் என்பிஆா் புதுப்பித்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com