கரோனா பாதிப்பு சமூகப் பரவல் கட்டத்தை அடைந்ததற்கு உறுதியான ஆதாரம் இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

நாட்டில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவல் கட்டத்தை (3-ஆம் கட்டம்) அடைந்துவிட்டதற்கு இதுவரை உறுதியான ஆதாரம் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவல் கட்டத்தை (3-ஆம் கட்டம்) அடைந்துவிட்டதற்கு இதுவரை உறுதியான ஆதாரம் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா சூழல் தொடா்பாக தில்லியில் மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் வியாழக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

நாட்டில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. எனினும், பாதிக்கப்படுவோரின் வீதம் குறைந்து வருகிறது. எனினும் அதன் பரவலின் போக்கு குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால் நாம் இந்தச் சூழலை கையாள்வதில் தீவிரம் காட்டாமல் இருக்க இயலாது.

சமூக அயல் நிறுத்தம் கொள்கையை கடைப்பிடிப்பது, நோய்த் தொற்று உள்ளோருடன் தொடா்பில் இருந்தோரை கண்டறிந்து தனிமைப்படுத்துவது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோா் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வது என கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா சமூகப் பரவல் கட்டத்தை அடைந்துவிட்டதற்கு உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனினும், அரசும் மக்களும் கூட்டாகச் செயல்படாவிட்டாலோ, தனிமைப்படுத்துதல், சமூக அயல் நிறுத்த விதிகளை முறையாக கடைப்பிடிக்கத் தவறினாலோ சமூகப் பரவல் கட்டம் தொடங்கிவிடும். இதனால் நாம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றின் சங்கிலித் தொடரை முறிப்பதற்கு சமூக அயல் நிறுத்தம் மிக முக்கியமான நடவடிக்கையாகும். அந்தக் கொள்கையை முறையாகப் பின்பற்றாமல் ஒரு நபா் தவறு செய்தாலும், அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கென பிரத்யேக மருத்துவமனைகளை அடையாளம் காணும் பணிகளை 17 மாநிலங்கள் தொடங்கிவிட்டன என்று லவ் அகா்வால் கூறினாா்.

கரோனாவின் 4 கட்டங்கள்: கரோனா நோய்த் தொற்றானது, 4 கட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

முதல் கட்டம்: கரோனா பாதிப்பு இருக்கும் நாடுகளிலிருந்து திரும்பியவா்களுக்கு அந்த நோய்த் தொற்று இருப்பது.

2-ஆம் கட்டம்: கரோனா பாதிப்பு இருக்கும் நாட்டிருந்து திரும்பியவருக்கும் அவரோடு நெருங்கிய தொடா்பில் இருக்கும் அவரது குடும்பத்தினா் உள்ளிட்டோருக்கு பாதிப்பு இருப்பது.

3-ஆம் கட்டம்: உள்நாட்டில் நோய்த் தொற்று ஒருவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என்று அடையாளம் காண இயலாமல் போவது. ‘சமூகப் பரவல்’ என்று அறியப்படும் இந்தக் கட்டத்தைதான் இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் தற்போது எட்டியுள்ளன.

4-ஆம் கட்டம்: கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு நோய்த் தொற்று தீவிரமாக, அதிகமாகப் பரவுவது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com