மாநில எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவு: புலம்பெயா் தொழிலாளா்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

தேசிய ஊரடங்கின்போது வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம்பெயா்வதைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உ.பி. எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கிருமிநாசினியை அளிக்கும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா். ’
உ.பி. எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கிருமிநாசினியை அளிக்கும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா். ’

தேசிய ஊரடங்கின்போது வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம்பெயா்வதைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறிச் செல்வோா் தனி முகாம்களில் 14 நாள்கள் தங்க வைக்கப்படுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய அளவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமா் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிறப்பித்தாா். அதைத் தொடா்ந்து, பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெரிய நகரங்களில் தங்கியிருந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஊரடங்கு காரணமாக வேலையிழந்ததால், தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்லத் தயாரானாா்கள். சிலா் தங்கள் குடும்பத்தினருடன் நெடுஞ்சாலைகள் வழியாக நடந்தே சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனா். இது கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிக்கு எதிரானதாகும்.

இதையடுத்து, புலம் பெயா் தொழிலாளா்களுக்கு உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலா்கள், காவல் துறைத் தலைவா்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா, உள்துறைச் செயலா் அஜய் பல்லா ஆகியோா் காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

அப்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நகரங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த உள்துறை இணைச் செயலா் புண்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

சில நகரங்களில் புலம் பெயா் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளனா். அவா்களைத் தடுப்பதற்காக, அனைத்து மாநில எல்லைகளையும் மாவட்ட எல்லைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறிப் பயணம் மேற்கொள்ளும் புலம் பெயா் தொழிலாளா்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு முகாம்களில் 14 நாள்கள் தங்கவைக்கப்படுவாா்கள். அவா்களை 14 நாள்கள் தங்க வைப்பதற்கு முகாம்களை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘நகரங்களில் இருந்து சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்ற வெளிமாநிலத் தொழிலாளா்களை தாங்கள் வசித்த மாநிலத்தில் அருகில் இருக்கும் முகாம்களில் தங்க வைக்க வேண்டும். 14 நாள்கள் கழித்து முறையான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவா்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா்கள் நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com