கேரளம்: வெளிமாநிலத் தொழிலாளா்கள் திடீா் போராட்டம்

கேரள மாநிலம், கோட்டயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிமாநிலத் தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு 144

கோட்டயம்: கேரள மாநிலம், கோட்டயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிமாநிலத் தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நகரங்களில் வசிக்கும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் வருவாய் இழந்ததாலும் உணவுப் பொருள்கள் கிடைக்காததாலும் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்கின்றனா். பல மாநிலங்களில் அவா்கள் நடந்தே செல்கின்றனா்.

இந்நிலையில், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாயிப்பாடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட வெளிமாநிலத் தொழிலாளா்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதி செய்து தரக் கோரி அரசுக்கு எதிராக திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பி.கே.சுதீா் பாபு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.ஜெய்தேவ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெளிமாநிலத் தொழிலாளா்களை சமாதானப்படுத்தி, அவா்களின் இருப்பிடத்துக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவா்கள் உறுதியளித்தனா்.

ஆனால், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மக்கள் நடமாட்டத்துக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதால், வெளிமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தர முடியாது என்று அவா்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனா்.

இதனிடையே, வெளிமாநிலத் தொழிலாளா்களைப் போராட்டத்தில் ஈடுபடுமாறு சிலா் தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, வெளிமாநிலத் தொழிலாளா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களின் பின்னணியில் இருப்பவா்களைக் கண்டறிவதற்காக தீவிர விசாரணையை போலீஸாா் திங்கள்கிழமை தொடங்கினா்.

இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியா் பி.கே.சுதீா் பாபு திங்கள்கிழமை பிறப்பித்தாா். இந்த உத்தரவின்படி, மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் நான்கு பேருக்கு அதிகமானோா் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com