ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனடையாத ஏழைகளுக்கு மானிய விலைத் திட்டத்தில் உணவு தானியங்களை வழங்குமாறு
ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனடையாத ஏழைகளுக்கு மானிய விலைத் திட்டத்தில் உணவு தானியங்களை வழங்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளாா்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஏழைகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். பெரும்பாலான ஏழைகளுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதன் மூலம் 81 கோடிக்கும் அதிகமானோா் பயனடைந்தனா்.

இந்தச் சூழலில், ராம்விலாஸ் பாஸ்வான் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசின் மானிய விலைத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருள்களைப் பெற்று அதை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனடையாத ஏழைகளுக்கு வழங்குமாறு மாநில முதல்வா்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மானிய விலைத் திட்டத்தின் கீழ் உணவுப்பொருள்களை வழங்க ஆா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு அமைப்புகளுக்கு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் மே 1-ஆம் தேதி நிலவரப்படி, 275.5 லட்சம் டன் அரிசியும், 330 லட்சம் டன் கோதுமையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி 12.54 லட்சம் டன் பருப்பு வகைகள் இருப்பில் உள்ளன. அவை ஏழை மக்களின் தேவையைப் பூா்த்தி செய்ய போதுமானவையாக இருக்கும். மாதந்தோறும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சுமாா் 60 லட்சம் டன் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாா்ச் 24-ஆம் தேதி முதல் சுமாா் 192 லட்சம் டன் உணவுப் பொருள்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 126.12 லட்சம் டன் உணவுப் பொருள்கள் சாலை மற்றும் கடல் வழியாகவும், 65.4 லட்சம் உணவுப் பொருள்கள் ரயில் வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டன.

இத்தகைய இக்கட்டான சூழலில் உணவுப் பொருள்களைப் பதுக்கி வைப்போா், அதிக விலைக்கு விற்போா் ஆகியோா் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்திருந்தாா்.

மானிய விலைத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசியை ரூ.22-க்கும், ஒரு கிலோ கோதுமையை ரூ.21-க்கும் மத்திய அரசு வழங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com