கரோனா பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: உ.பி. அரசின் புதிய சட்டம்

உத்தரப் பிரதேசத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கரோனா பணியாளர்களைத் தாக்கினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப் பிரதேசத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கரோனா பணியாளர்களைத் தாக்கினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று இந்த புதிய அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அதன்படி, சட்ட வரைவு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கரோனா பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'உ.பி.  தொற்று நோய் கட்டுப்பாட்டு சட்டம் 2020'  என்ற புதிய சட்டம் இயற்றப்படுகிறது. அதன்படி, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கரோனா பணியாளர்களை யாரேனும் தாக்கினால் அவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை  மற்றும் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 

அதேபோன்று கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர், தனிமைப்படுத்தலை மீறினால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். 

இதுதொடர்பாக 'தொற்றுநோய் நோய்கள் சட்டம், 1897' இல் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com