ரூ.411 கோடி கடன்: தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிறகு புகார் கொடுத்த எஸ்பிஐ

ரூ.411 கோடி கடன் வாங்கிவிட்டு கடனை செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிறகு, அவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் எஸ்பிஐ புகார் அளித்துள்ளது.
ரூ.411 கோடி கடன்: தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிறகு புகார் கொடுத்த எஸ்பிஐ

ரூ.411 கோடி கடன் வாங்கிவிட்டு கடனை செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிறகு, அவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் எஸ்பிஐ புகார் அளித்துள்ளது.

பல்வேறு வங்கிகளில் ரூ.411 கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி ராம் தேவ் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 

ஆனால், இவர்கள் மூன்று பேருமே நாட்டை விட்டு தப்பியோடிய பிறகுதான் எஸ்பிஐ புகார் அளித்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேற்கு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்யும் பணியை மேற்கொண்டு வந்த ராம் தேவ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர்களான நரேஷ் குமார், சுரேஷ் குமார் மற்றும் சங்கீதா ஆகியோர் மீது எஸ்பிஐ புகார் கொடுத்துள்ளது. அதில், இந்த நிறுவனம் ரூ.173 கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு திரும்ப செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு நாட்டில் 3 அரிசி ஆலைகளும், பல்வேறு தொழிற்சாலைகளும் இருப்பதாகவும், வணிக தேவைகளுக்காக சௌதி அரேபியா மற்றும் துபையிலும் அலுவலகங்கள் இருப்பதாகவும் எஸ்பிஐ தனது புகாரில் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ மட்டுமல்லாமல், கனரா வங்கி, இந்திய யூனியன் வங்கி, ஐடிபிஐ, சென்டிரல் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவையும் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை என்று அவர்கள் மீது புகார்களை பதிவு செய்துள்ளன.

வழக்குப் பதிவு செய்த சிபிஐ, ஊரடங்கு நடவடிக்கையால் இது குறித்து எந்த தேடுதல் நடவடிக்கையையும் இன்னும் தொடரவில்லை. முதலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் பதிலளிக்காவிட்டால்தான் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட கடன் 2016ம் ஆண்டிலேயே வாராக்கடனாக அறிவிக்கப்பட்டும், கடனாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்ட நிலையில், 2020 பிப்ரவரி 25ம் தேதி தான் எஸ்பிஐ வங்கி சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com