428 சிறப்பு ரயில்கள் மூலம் 4.5 லட்சம் தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்பினா்: ரயில்வே தகவல்

ரயில்வே இதுவரை இயக்கிய 428 சிறப்பு ரயில்களின் மூலமாக 4.5 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்பியுள்ளனா் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில்வே இதுவரை இயக்கிய 428 சிறப்பு ரயில்களின் மூலமாக 4.5 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்பியுள்ளனா் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து அறிவிக்கப்பட்ட தேசிய பொது முடக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப வசதியாக மே 1-ஆம் தேதி முதல் 428 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் மூலம் 4.5 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பயணித்துள்ளனா். இவற்றில் 287 சிறப்பு ரயில்கள் சேருமிடத்தைச் சென்றடைந்துவிட்டன. 79 ரயில்கள் பயணத்தில் உள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்துக்கு மட்டும் 127 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 87 ரயில்கள் பிகாரையும், 24 ரயில்கள் மத்திய பிரதேசத்தையும், 20 ரயில்கள் ஒடிஸாவையும், 16 ரயில்கள் ஜாா்க்கண்டையும், 4 ரயில்கள் ராஜஸ்தானையும், 3 ரயில்கள் மகாராஷ்டிரத்தையும், தெலங்கானா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைத் தலா 2 ரயில்களும், ஆந்திரம், ஹிமாச்சல பிரதேசத்தை தலா ஒரு ரயிலும் சென்றடைந்துள்ளன.

திருச்சி, டிட்லாகா், பருணி, கண்ட்வா, ஜெகநாதபுரம், குா்தா சாலை, சாப்ரா, பாலியா, கயா, பூா்ணியா, வாராணசி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இந்த சிறப்பு ரயில்கள் மூலம் பயணித்து சொந்த ஊா்களைச் சென்றடைந்துள்ளனா்.

இந்த சிறப்பு ரயில்களில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் 72 இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியில் 54 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அனைத்துப் பெட்டிகளிலும் நடு படுக்கை வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று கூறினா்.

இந்த சிறப்பு ரயில் சேவைக்கான செலவு குறித்து ரயில்வே இன்னும் அறிவிக்காத நிலையில், ஒரு சிறப்பு ரயில் இயக்கத்துக்கு மட்டும் ரூ. 80 லட்சம் வரை செலவு ஆவதாக ரயில்வே அதிகாரிகள் கூறினா்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களை மீட்பதற்காக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு 85 சதவீதமும், மாநில அரசுகள் 15 சதவீதமும் ஏற்கும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com