
கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியாவிலிருந்து முதற்கட்டமாக 88 செவிலியா்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றடைந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,417 ஆக உள்ள நிலையில், அங்கு 185 போ் உயிரிழந்தனா். அங்குள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கேரளம், கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைச் சோ்ந்த மருத்துவமனைகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட செவிலியா்கள் 14 நாள்களுக்கு தனிமைபடுத்தப்பட்டப் பின்னா் தேவைக்கேற்ப பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்படுவாா்கள் என அந்நாட்டு ஊடகமான ‘கலீஜ் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 88 செவிலியா்களும் துபை விமான நிலையத்திற்கு சனிக்கிழமை சிறப்பு விமானம் மூலம் சென்றடைந்தனா்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்தும் என ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதா் பவன் கபூா் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘கரோனா தொற்றைக் கையாளுவதில் இரு நாடுகள் எவ்வாறு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளன. இரண்டு நாடுகளும் நட்பின் அடிப்படையில் ஒத்துழைப்பது என்ற குறிக்கோளுடன் இந்த உதவி அளிக்கப்படுகிறது’ என்றாா்.
இந்திய தூதரகத்தின் ஜெனரல் விபுல் கூறுகையில், ‘இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான இருதரப்பு உறவுக்கு எடுத்துக்காட்டாகவும், ஆழமான புரிதலையும் இது பிரதிபலிக்கிறது. கரோனா நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும், சிகிச்சையளிப்பதிலும் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்’ என்றாா்.