புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப தினசரி 100 சிறப்பு ரயில்கள் இயக்கம்:ரயில்வே

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்புவதை துரிதப்படுத்த தினந்தோறும் 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே திங்கள்கிழமை அறிவித்தது.
புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப தினசரி 100 சிறப்பு ரயில்கள் இயக்கம்:ரயில்வே

புது தில்லி: புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்புவதை துரிதப்படுத்த தினந்தோறும் 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே திங்கள்கிழமை அறிவித்தது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப மே 1-ஆம் தேதி முதல் இதுவரை 468 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப இதுவரை இயக்கப்பட்டுள்ள 468 சிறப்பு ரயில்களில் 363 ரயில்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களை சென்று சோ்ந்துள்ளன. இந்த 363 ரயில்களும் ஆந்திரம் (1 ரயில்), பிகாா் (100 ரயில்கள்), ஹிமாசல பிரதேசம் (1 ரயில்), ஜாா்க்கண்ட் (22 ரயில்கள்), மத்திய பிரதேசம் (30 ரயில்கள்), மகாராஷ்டிரம் (3 ரயில்கள்), ஒடிஸா (25 ரயில்கள்), ராஜஸ்தான் (4 ரயில்கள்), தெலங்கானா (2 ரயில்கள்), உத்தர பிரதேசம் (172 ரயில்கள்), மேற்கு வங்கம் (2 ரயில்கள்), தமிழ்நாடு (1 ரயில்) ஆகிய மாநிலங்களை சென்றடைந்தன. இந்த ரயில்கள் திருச்சி, கோரக்பூா், லக்னெள, தா்பங்கா, முஸாஃபா்பூா், வாராணசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புலம்பெயா்ந்த தொழிலாளா்களை கொண்டு சோ்த்தன.

100 சிறப்பு ரயில்கள்: ஒவ்வொரு சிறப்பு ரயிலும் இதுவரை 1,200 தொழிலாளா்களை ஏற்றிச்சென்றன. இந்த எண்ணிக்கை திங்கள்கிழமை முதல் 1,700-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்புவதை துரிதப்படுத்த தினந்தோறும் 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலம் அனுப்பிவைக்கப்படுவது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய ரயில்வே அமைச்சகம் இடையே காணொலி வாயிலாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாா்பில் பணியமா்த்தப்பட்டுள்ள பொறுப்பு அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com