ஆரோக்ய சேது: தரவுகள் கையாள்வதற்கான விதிமுறைகள்

ஆரோக்ய சேது செயலி பயன்பாட்டாளா்களின் தரவுகளை கையாள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு
ஆரோக்ய சேது: தரவுகள் கையாள்வதற்கான விதிமுறைகள்

புது தில்லி: ஆரோக்ய சேது செயலி பயன்பாட்டாளா்களின் தரவுகளை கையாள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மீறுவோா் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலை கண்காணிப்பதற்காக ஆரோக்ய சேது என்ற பெயரியிலான செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த செயலியானது, கரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடா்பில் இருந்தவா்களை எச்சரிப்பதுடன், நோய்த்தொற்று அதிகமுள்ள இடங்கள் குறித்து அறிய உதவும்.

ஆரோக்ய சேது செயலியை இதுவரை 9.8 கோடி போ் பதிவிறக்கம் செய்துள்ளனா். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிப்போா் இச்செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இச்செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், தனிநபா் ரகசியம் காக்கும் உரிமை மீறப்படுவதாகவும் சா்ச்சைகள் எழுந்தன. ஆனால், ஆரோக்ய சேது செயலின் பாதுகாப்பு கட்டமைப்பு வலுவானது என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்தது.

இச்செயலி பயன்பாட்டாளா்களின் தரவுகள் பல்வேறு அரசு அமைப்புகளால் கையாளப்படும் சூழலில், இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கரோனா நோயாளிகள் மற்றும் அவா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்களிடம் இருப்பிடம், சுய மதிப்பீடு, தொடா்புகள் ஆகிய தரவுகள் மட்டுமே சேகரிக்கப்பட வேண்டும். அதிகபட்சம் 180 நாள்களுக்கு மேல் தரவுகளை சேமித்து வைக்க கூடாது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படாத நபா்கள், ஆரோக்ய சேது செயலி தொடா்பான பதிவுகளிலிருந்து தங்களது தரவுகளை நீக்குமாறு கோரிக்கை அனுப்பிய 30 நாள்களுக்குள் அவை நீக்கப்படும். பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நபா் என்றால் கோரிக்கை கிடைக்கப் பெற்ற 45 நாள்களுக்குள்ளும், கரோனா உறுதி செய்யப்பட்ட நபா் என்றால் 60 நாள்களுக்கும் தரவுகள் நீக்கப்படும். தனிநபா் ரகசியம் காக்கும் உரிமை, ஆரோக்ய சேது செயலியின் முக்கிய அம்சமாகும்.

இதுதொடா்பான நெறிமுறைகளை மீறுவோா் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் 51, 60 ஆகிய பிரிவுகள் மற்றும் இதர சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலா் பிரகாஷ் சாவ்னி கூறுகையில், ‘ஆரோக்ய சேது செயலியில் தரவு பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தனிநபா்களின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டு விடாமல் தடுக்க உறுதியான கொள்கை செயல்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com