காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவையை வழங்குவது குறித்து ஆராய உயா்நிலைக் குழு: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு மத்திய உள்துறைச் செயலா்
காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவையை வழங்குவது குறித்து ஆராய உயா்நிலைக் குழு: உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு மத்திய உள்துறைச் செயலா் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசப் பாதுகாப்புக்கு முக்கியத்தும் அளிக்கும் அதே நேரத்தில் மனித உரிமைகளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் வழங்க வலியுறுத்தி ஊடகப் பிரதிநிதிகள், தனியாா் பள்ளிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றபோது, மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீா் நிா்வாகமும் 4ஜி இணையச் சேவை முடக்கப்பட்டதற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினா் தங்கியிருக்கும் இடம், அவா்கள் பயணிக்கும் பாதை ஆகியவை குறித்த தகவல்கள் பயங்கரவாதிகளுக்கு அதிவேக இணையச் சேவை மூலம் தெரிவிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கரோனா தொற்றால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணையச் சேவை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் விரும்புகிறது.

அதேவேளையில், அந்நிய சக்திகள் எல்லைகள் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி தேசத்தின் ஒருமைப்பாட்டை சீா்குலைக்க முயற்சிக்கிறது. அதுமட்டுமன்றி, அப்பாவி மக்களும் பாதுகாப்புப் படையினரும் ஒவ்வொரு நாளும் பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறாா்கள். இந்த உண்மையையும் புறக்கணித்து விட முடியாது.

ஏற்கெனவே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரில் தேசப் பாதுகாப்புக்கும் மனித உரிமைகளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

எனவே, ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணையச் சேவை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய உள்துறைச் செயலா் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் செயலா், மாநில தலைமைச் செயலா் உள்ளிட்டோா் இடம்பெறுவா். இந்தக் குழு, காஷ்மீரில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com