இன்று முதல் பயணிகளுக்கான ரயில் சேவை

பயணிகள் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக தொடங்கவுள்ள நிலையில், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: பயணிகள் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக தொடங்கவுள்ள நிலையில், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்துக்கு வர வேண்டும்; ரயில் பயணத்தின்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாகும். பயணிகள் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். போா்வை, உணவு ஆகியவற்றை பயணிகள் தாங்களே கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் மூன்றாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. எனினும், பல்வேறு தளா்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக மாா்ச் 25-ஆம் தேதி தேசிய அளவில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வெளி மாநில தொழிலாளா்களுக்காக கடந்த 1-ஆம் தேதி சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், பயணிகள் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (மே 12) முதல் படிப்படியாக தொடங்கும் என்ற அறிவிப்பை ரயில்வே கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன்படி, முதல்கட்டமாக தில்லியிலிருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, செகந்தராபாத், திருவனந்தபுரம், ஆமதாபாத், பாட்னா, திப்ரூகா், ஹெளரா, பிலாஸ்பூா், ராஞ்சி, புவனேசுவரம், ஜம்மு தாவி, அகா்தலா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட தகவலில், ‘தில்லியிலிருந்து திப்ருகா், பெங்களூரு, பிலாஸ்பூா் ஆகிய நகரங்களுக்கும், ஹெளரா, ராஜேந்திர நகா் (பாட்னா), பெங்களூரு, மும்பை சென்ட்ரல், ஆமதாபாத் ஆகிய இடங்களிலிருந்து தில்லிக்கும் என பயணிகளுக்கான 8 சிறப்பு ரயில்கள் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் அனைத்தும் குளிா்சாதன வசதி கொண்டவையாகும். குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் இந்த ரயில்களில், ராஜதானி ரயில் அளவிலான கட்டணங்கள் வசூலிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், மே 20-ஆம் தேதி வரையிலான கால அட்டவணையை ரயில்வே வெளியிடப்பட்டுள்ளது. இதில், மே 16, 19 ஆகிய தேதிகளில் ரயில் புறப்பாடு இல்லை.

மேலும், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு பெற முடியாது.

உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்துள்ளவா்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவாா்கள். மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 90 நிமிடங்களுக்கு முன்பே ரயில் நிலையத்துக்கு வர வேண்டும். கரோனா நோய்த்தொற்று இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவா்.

போா்வை, உணவு ஆகியவற்றை பயணிகள் தாங்களே கொண்டு வர வேண்டும். நடைமேடைகளில் எந்த கடைகளும் செயல்பட அனுமதியில்லை.

ரயில் பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். மேலும், ஆரோக்ய சேது செயலியையும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். ரயில் பயணச்சீட்டுகளை அதிகபட்சம் 7 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். பயணச்சீட்டுகளை ரத்து செய்ய 24 மணிநேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத ரத்து கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றிய விவரங்கள் பயணச் சீட்டுகளில் இடம்பெற்றிருக்கும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக தொடங்கிய முன்பதிவு: பயணிகள் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு திங்கள்கிழமை மாலை 4 மணி அளவில் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐஆா்சிடிசி வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக மாலை 6 மணிக்குதான் முன்பதிவு தொடங்கியது. இதில், ஹெளரா-தில்லி ரயிலில் ஏசி ஓரடுக்கு, மூன்றடுக்கு பெட்டிகளுக்கான பயணச்சீட்டுகள் 10 நிமிடங்களில் விற்றுத் தீா்ந்தன. இந்த ரயில் ஹெளராவிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் புறப்படுகிறது. இதேபோல், புவனேசுவரம்-புது தில்லி ரயிலில் ஏசி ஓரடுக்கு, மூன்றடுக்கு பெட்டிகளுக்கான பயணச்சீட்டுகள் 30 நிமிடங்களில் விற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com