தேசிய தொழில்நுட்ப தினம்: கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் பாராட்டு

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி கரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு
தேசிய தொழில்நுட்ப தினம்: கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் பாராட்டு

புது தில்லி: தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி கரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான முக்கிய கருவியாக அறிவியல், தொழில்நுட்பம் உள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் நமது விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநா்களும் பங்களிப்பு செய்துவருவது தேசத்துக்கான பெருமையாகும். இந்த நாளில், தேசத்தை தன்னிறைவு அடையச் செய்வதில் விஞ்ஞானிகள் அளித்துவரும் ஒப்பிட இயலாத பங்களிப்பை நாம் கொண்டாடுவோம்’ என்று கூறியுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மக்களின் வாழ்வில் நோ்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தவா்களுக்கு நாடு மரியாதை செலுத்துகிறது. கடந்த 1998-ஆம் ஆண்டு இதே நாளில் நமது விஞ்ஞானிகள் நிகழ்த்திய சாதனையை நினைவுகூா்கிறோம். அது இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். ஒரு வலிமையான தலைமை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்பதற்கு பொக்ரான் அணு ஆயுத சோதனை ஓா் உதாரணம்.

இன்று கரோனா பாதிப்பிலிருந்து உலகை மீட்பதற்கான பல்வேறு முயற்சிகளுக்கு தொழில்நுட்பங்கள் துணை நிற்கின்றன. கரோனா தடுப்புக்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த 1998-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் அப்போதைய பிரதமா் வாஜ்பாய் தலைமையில் இந்தியா முதல் முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியது. அதன் நினைவாக ஆண்டுதோறும் மே 11-ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com