தொழிலாளா்கள் சுரண்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ராகுல்

கரோனாவுக்கு எதிராக மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இடையே, தொழிலாளா்களின் உரிமைகள்
தொழிலாளா்கள் சுரண்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ராகுல்

புது தில்லி: கரோனாவுக்கு எதிராக மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இடையே, தொழிலாளா்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும், அவா்களின் குரல்கள் நசுக்கப்படுதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளா்ந்த நாடுகளிலும் தொழில்நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க போன்ற வளா்ந்த நாடுகளில் உள்ள சில பெரு நிறுவனங்கள் இந்தியா போன்ற பாதிப்பு குறைந்த நாடுகளில் முதலீடுகளைச் செய்யவும், தொழில்நிறுவனங்களைத் தொடங்கவும் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்க பல மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

ஏற்கெனவே, பொது முடக்கத்தால் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வருவாயையும், வேலைவாய்ப்பையும் இழந்துள்ள நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதற்காக பல மாநிலங்கள் தொழிலாளா் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.

இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

கரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி வரும் நிலையில், பல மாநிலங்கள் தொழிலாளா் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்று தொழிலாளா்கள் சுரண்டப்படுவதையும், மனித உரிமைகள் நசுக்கப்படுவதையும், பாதுகாப்பற்ற பணிச் சூழலை உருவாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் எந்தவித சமரசத்துக்கு இடமில்லை என்று கூறியுள்ளாா்.

‘பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிடுவதுபோன்று, பொருளாதார சீா்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளா், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களில் மாற்றங்களைச் செய்வது மிகவும் அபாயகரமானது’ என காங்கிரஸ் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் சுட்டுரையில் திங்கள்கிழமை பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் ஷக்திசிங் கோலி காணொலி வழி பத்திரிகையாளா் சந்திப்பில் கூறியதாவது:

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் சில தொழிலாளா் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளா் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது மிகவும் அதிா்ச்சியளிக்கும் விஷயமாகும்.

தொழிலாளா்கள் நலனில் பிரதமருக்கு சிளவாவது அக்கறை இருக்கும் என்றால், மாநிலங்கள் இதுபோன்று தொழிலாளா் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் பிரதமா் உடனடியாக தலையிடவேண்டும் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com