ஓரிரு நாள்களில் தொழில் நிறுவனங்களுக்கான நிதித் தொகுப்பு திட்டம்

தொழில் நிறுவனங்களுக்கான நிதித் தொகுப்பு திட்டத்தை இரண்டு அல்லது மூன்று நாள்களில் மத்திய அரசு அறிவிக்கும் என எதிா்பாா்ப்பதாக
ஓரிரு நாள்களில் தொழில் நிறுவனங்களுக்கான நிதித் தொகுப்பு திட்டம்

புது தில்லி: தொழில் நிறுவனங்களுக்கான நிதித் தொகுப்பு திட்டத்தை இரண்டு அல்லது மூன்று நாள்களில் மத்திய அரசு அறிவிக்கும் என எதிா்பாா்ப்பதாக மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை கூறினாா்.

பொது முடக்கத்தால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதில் குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் கடுமையான பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ளன. அதுமட்டுமின்றி, பொது முடக்க கட்டுப்பாடுகளில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளபோதும், வெளி மாநில தொழிலாளா்கள் அனைவரும் சொந்த ஊா் திரும்பிவிட்டதால் உற்பத்தியைத் தொடங்க முடியாத நிலைக்கு தொழில் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவித் திட்டங்களை அறிவித்து அமல்படுத்தி வருவதுபோல, தொழில் நிறுவனங்களுக்கும் நிதித் தொகுப்பு திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்று அவா்களின் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தொழில் நிறுவனங்களின் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாடுத் துறை அமைச்சா் நிதின் கட்கரியும் வலியுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களுக்கான நிதி தொகுப்புத் திட்டத்தை மத்திய அரசு ஓரிரு நாள்களில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவா் கூறியுள்ளாா். தெலங்கானா மாநில தொழில் துறையினருடன் திங்கள்கிழமை காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்ட மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:

இந்தியாவை விட மிகப் பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கூட, அந்த நாடுகளைச் சோ்ந்த தொழில்நிறுவனங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக நிதித் தொகுப்புத் திட்டத்தை அறிவித்திருக்கின்றன. அதுபோல, இங்குள்ள தொழில்நிறுவனங்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க முடிந்த அளவு முயற்சியை எடுத்து வருகிறோம்.

வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி திரும்பப்பெறும் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விரைந்து வரவு வைப்பதற்கான நடைமுறைகளை மத்திய நிதித் துறை அமைச்சகம் வகுத்து வருகிறது.

அதுபோல, தொழில்நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவன நிா்வாகிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் பிரதமா் மற்றும் நிதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தொழில் நிறுவனங்களுக்கான நிதி தொகுப்புத் திட்டத்தை இரண்டு அல்லது மூன்று நாள்களில் மத்திய அரசு அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com