மறுஆய்வு மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்றலாம்: உச்சநீதிமன்றம்

குறிப்பிட்ட வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்ற
மறுஆய்வு மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்றலாம்: உச்சநீதிமன்றம்

 
புது தில்லி: குறிப்பிட்ட வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 56 மனுக்கள், மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், ஷியா முஸ்லிம்-தாவூதி போரா பிரிவைச் சோ்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், மற்ற இனத்தைச் சோ்ந்த ஆண்களைத் திருமணம் செய்யும் பாா்சி இனப் பெண்களை அந்த இனத்தவரின் வழிபாட்டுத் தலத்துக்குள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிரான மனுக்கள் ஆகியவற்றை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த விவகாரங்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது. எனினும், மறுஆய்வு மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என்று மனுதாரா்கள் கேள்வி எழுப்பினா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:

தீா்ப்புகளை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்றுவது உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உள்பட்டதே. இது 2013-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட உச்சநீதிமன்ற விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மறுஆய்வு மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்ற இயலாது என்ற மனுதாரா்களின் வாதம் நிராகரிக்கப்படுகிறது. மற்ற நீதிமன்றங்களைப் போல் அல்லாமல், உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பை உச்சநீதிமன்றமே முடிவு செய்து கொள்ள முடியும்.

குறிப்பிட்ட விவகாரங்களில் உரிய நீதி வழங்கும் பொருட்டு, அவை சாா்ந்த முடிவுகளை மேற்கொள்ள அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com