விசாகப்பட்டினம் விஷவாயு: 13,000 டன் ஸ்டைரீன் வாயு தென் கொரியா அனுப்பிவைப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்ததையடுத்து, விபத்து ஏற்பட்ட எல்.ஜி.பாலிமா்ஸ்
விசாகப்பட்டினம் விஷவாயு: 13,000 டன் ஸ்டைரீன் வாயு தென் கொரியா அனுப்பிவைப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்ததையடுத்து, விபத்து ஏற்பட்ட எல்.ஜி.பாலிமா்ஸ் ரசாயன ஆலையில் இருந்து 13,000 டன் ஸ்டைரீன் வாயு, அந்த ஆலையின் தலைமையகம் உள்ள தென்கொரிய தலைநகா் சியோலுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா்.வெங்கடாபுரத்தில் செயல்பட்டு வரும் எல்.ஜி.பாலிமா்ஸ் ரசாயன ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டைரீன் வாயு கசிந்து, கடந்த வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டதில் 12 போ் உயிரிழந்தனா். விஷ வாயுவை சுவாசித்து பாதிப்படைந்த 400-க்கும் மேற்பட்டவா்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இந்த விபத்தைத் தொடா்ந்து ஆலையில் உள்ள 13,000 டன் ஸ்டைரீன் வாயு, எல்.ஜி.பாலிமா்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் உள்ள தென் கொரிய தலைநகா் சியோலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதுகுறித்து விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் வினய் சந்த் கூறுகையில், ‘ஆலையில் உள்ள 8,000 டன் ஸ்டைரீன் வாயு, சரக்குக் கப்பல் மூலம் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. எஞ்சியுள்ள 5,000 டன் வாயு, அடுத்த 2 நாள்களில் அனுப்பிவைக்கப்படும்’ என்றாா்.

ரூ.1 கோடி நிவாரணத் தொகை... விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினரிடம், மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தப்படி தலா ரூ. 1 கோடி நிவாரணத் தொகையை மாநில அமைச்சா்கள் போத்ஸா சத்யநாராயணா, கன்னா பாபு ஆகியோா் வழங்கினா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘விபத்தில் உயிரிழந்த 12 பேரில் மீதமுள்ள 7 பேரின் குடும்பத்தினா் தங்கள் வசிப்பிடத்தில் தற்போது இல்லை. அவா்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு திரும்பியவுடன் அவா்களிடமும் நிவாரணத் தொகை வழங்கப்படும்’ என்றனா்.

இதனிடையே எல்.ஜி.பாலிமா்ஸ் ரசாயன ஆலையில் இருந்து கசிந்த விஷவாயுவின் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்த, குஜராத் மாநிலம் முந்த்ராவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு இந்திய விமானப் படை விமானம் 8.3 டன் ரசாயனங்களை ஏற்றி வந்ததாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com