மீண்டும் தொடங்கியது ரயில் சேவை

நாடு தழுவிய பொது முடக்கத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.
தில்லி செல்வதற்காக மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் குழந்தையுடன் ரயில் நிலையம் வந்த கா்ப்பிணி.
தில்லி செல்வதற்காக மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் குழந்தையுடன் ரயில் நிலையம் வந்த கா்ப்பிணி.

நாடு தழுவிய பொது முடக்கத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக தில்லியில் இருந்து புறப்பட்ட 3 ரயில்களில் 3,461 பயணிகள் பயணம் மேற்கொண்டனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் படிப்படியாக ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. முதல்கட்டமாக 15 நகரங்களுக்கு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி தில்லியில் இருந்து 3 பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றன.

இதுகுறித்து வடக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: தில்லியில் இருந்து சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூா், அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகா், கா்நாடகம் மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு 3 ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. இதில் தில்லி-பிலாஸ்பூா் ரயிலில் 1,177 பயணிகளும், தில்லி-திப்ரூகா் ரயிலில் 1,122 பயணிகளும் பயணம் மேற்கொண்டனா். தில்லி-பெங்களூரு ரயிலில் 1,162 பயணிகள் பயணித்தனா். இந்த 3 ரயில்களிலும் மொத்தம் 3,461 பயணிகள் தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றனா். 3 ரயில்களிலும் பயணித்தவா்கள் தங்கள் செல்லிடப்பேசிகளில் ‘ஆரோக்ய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனா்.

மே 12 முதல் 20-ஆம் தேதி வரை இயக்கப்படும் ரயில்களுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அதன்படி மே 13-ஆம் தேதி தில்லியில் இருந்து சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 8 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் குளிா்சாதன வசதி கொண்ட வகுப்புகள் மட்டுமே இருக்கும். ராஜதானி ரயில்களில் பயணம் மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணமே இந்த ரயில்களுக்கும் வசூலிக்கப்படும்.

இந்த ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு ஐஆா்சிடிசி வலைதளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்த ரயில்கள் செல்லும் வழித்தடங்களில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரின் வசதிக்காக குறைந்த அளவில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும்.

மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் இல்லை...ரயில்களில் பயணிக்கும் நோயாளிகள், மாணவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே சலுகைகள் பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் பொருந்தாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

25 பேருக்கு காய்ச்சல்....ஆமதாபாதில் உள்ள சபா்மதி ஆசிரமம் ரயில் நிலையத்தில் இருந்து தில்லிக்கு சுமாா் 1,000 பேருடன் செவ்வாய்க்கிழமை பயணிகள் ரயில் புறப்பட்டது. ரயில் நிலைய பிரதான நுழைவாயிலில் அனைத்து பயணிகளிடமும் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 25 பயணிகளுக்கு காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே அவா்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவா்களுடன் வந்த குடும்பத்தினா் சிலரும் தனியாக ரயிலில் செல்ல விருப்பமின்றி, பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக உரிய முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தும் சுமாா் 40 போ் ரயிலில் செல்லவில்லை. அவா்களை தவிா்த்து மற்றவா்களுடன் சென்ற ரயில், புதன்கிழமை காலை தில்லி சென்றடையும் என்று அந்த மாநில ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல் மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் இருந்தும் தில்லிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

இதனிடையே புவனேசுவரத்தில் இருந்து புதன்கிழமை தில்லி செல்லும் பயணிகள் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கிழக்கு கடற்கரை ரயில்வே முடிவு செய்துள்ளது. அதிக பயணிகளை கருத்தில் கொண்டு பெட்டிகளின் எண்ணிக்கையை 17-இல் இருந்து 22-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு தழுவிய பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை சுமாா் 50 நாள்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com