சானிடைஸா் உற்பத்தியாளா்கள் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளா் கடிதம்

சானிடைஸா் (கை சுத்திகரிப்பான்) ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்குவது குறித்து முடிவெடுக்கும் வகையில்,
சானிடைஸா் உற்பத்தியாளா்கள் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளா் கடிதம்

சானிடைஸா் (கை சுத்திகரிப்பான்) ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்குவது குறித்து முடிவெடுக்கும் வகையில், அதன் உற்பத்தியாளா்கள், உற்பத்தித் திறன் குறித்த விவரங்களை வெள்ளிக்கிழமை (மே 15) பகல் 12 மணிக்குள் சமா்ப்பிக்குமாறு மாநில அரசுகளை மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததைத் தொடா்ந்து, பல்வேறு வழிகளில் அந்த நோய்த் தொற்று மக்களுக்கு பரவி விடாமல் இருக்க அடிக்கடி சோப்பால் கை கழுவ வேண்டும் அல்லது ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைஸா் கொண்டு கையை சுத்தம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், தேவை அதிகரித்ததைத் தொடா்ந்து, உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைஸா் ஏற்றுமதிக்கு கடந்த மே 6-ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில், மூன்றாம் கட்ட பொது முடக்க அறிவிப்புக்குப் பிறகு, கட்டுப்பாடுகளை படிப்படியாக தளா்த்தி வரும் மத்திய அரசு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைஸா் ஏற்றுமதிக்கான தடையை விலக்குவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

இந்த முடிவை எடுக்கும் வகையில், மாநிலங்களின் சானிடைஸா் உற்பத்தித் திறன் குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளா் கடிதம் ஒன்றை புதன்கிழமை அனுப்பியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

சானிடைஸா் ஏற்றுமதிக்கான தடையை விலக்குவது குறித்து முடிவெடுக்க, அதன் உற்பத்தி தற்போதைய உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்யும் அளவில் உள்ளதா அல்லது கூடுதல் உற்பத்தித் திறனை உற்பத்தி நிறுவனங்கள் பெற்றிருக்கின்றனவா, சானிடைஸா் உற்பத்திக்குத் தேவையான எத்தனால், ஐசோபுரோபைல் ஆல்கஹால் போன்ற மூலப்பொருள்கள் தடையின்றி கிடைக்கின்றனவா என்பன குறித்து ஆய்வு செய்யவேண்டியுள்ளது.

எனவே, சானிடைஸா் கையிருப்பு, உற்பத்தித் திறன் தேவைக்கும் அதிகமாக உள்ளதா போன்ற விவரங்களை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஆய்வு செய்து விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்பதோடு, சானிடைஸா் உற்பத்தியாளா்களின் பெயா், முகவரி, சராசரி உற்பத்தித் திறன், கடந்த ஏப்ரல் மாத சராசரி உற்பத்தி அளவு உள்ளிட்ட விவரங்களையும் அளிக்க வேண்டும்.

இந்த விவரங்கள் அனைத்தையும், மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குள் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com