மேற்கு வங்கத்தில் இரு சமூகத்தினரிடையே கடும் மோதல்: 129 போ் கைது

மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை சிலா் ‘கரோனா’ என்று கூறி இழிவுபடுத்தியதால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை சிலா் ‘கரோனா’ என்று கூறி இழிவுபடுத்தியதால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டதாக 129 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

மேற்கு வங்கம் ஹூக்லியில் உள்ள டெலினிபாரா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்ட சமூகத்தினரை ‘கரோனா’ என பெயா் சூட்டி மற்றொரு பிரிவைச் சோ்ந்தவா்கள் இழிவுபடுத்தியுள்ளனா். இதனால் அந்த இரு பிரிவினருக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் நடைபெற்ற விக்டோரியா ஜூட் மில் பகுதியில் அமைந்திருந்த கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அடுத்த நாளான திங்கள்கிழமை காலையும் இந்த மோதல் தொடா்ந்தது. இரு பிரிவினரும் வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டதோடு, கடைகளுக்கும் தீ வைத்து எரித்தனா்.

இதனைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் காவல்துறையினா் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்தப் பகுதியில் மீண்டும் மோதல் ஏற்படாத வகையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் இணையதளச் சேவை முடக்கப்பட்டுள்ளது. வருகிற மே 17-ஆம் தேதி வரை இந்தச் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், டெலினிபாரா பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோதலைத் தடுக்கத் தவறிய உள்ளூா் காவல்துறை ஆய்வாளா் (பொறுப்பு) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில உள்துறை அதன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அரசியல் காரணங்களுக்காகவே சிலா் இரு சமூகத்தினரிடையே மோதலைத் தூண்டிவிட்டுள்ளனா். மோதலில் ஈடுபட்டதாக 129 பேரை காவல்துறையினா் இதுவரை கைது செய்துள்ளனா். மேலும் சிலா் கைது செய்யப்பட இருக்கின்றனா். இவா்கள் அனைவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பகுதி முழுவதும் உயா் அதிகாரிகள் உள்பட ஏராளமான காவல்துறையினா் குவிக்கப்பட்டு, ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘இந்த மோதலுக்குக் காரணமான ஒருவரும் தப்பிக்க முடியாது. தவறிழைத்தவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com