ஊரகப் பகுதிகளில் தீவிரமடையும் கரோனா பாதிப்பு

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக ஊரகப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
ஊரகப் பகுதிகளில் தீவிரமடையும் கரோனா பாதிப்பு

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக ஊரகப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

மாநில முதல்வா்களுடன் கடந்த திங்கள்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘‘கிராமப் பகுதிகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தாா்.

எனினும், கடந்த 1-ஆம் தேதி முதல் பல மாநிலங்களின் ஊரகப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு முன் கரோனா நோய்த்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்படாத பல மாவட்டங்களில் புதிதாக நோய்த்தொற்று பரவி வருகிறது. கிராமப் பகுதிகளில் நோய்த்தொற்று பாதிப்பு அதிக அளவில் ஏற்படவில்லை என்ற போதிலும், அதன் பரவல் தீவிரமடையுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 1-ஆம் தேதிக்குப் பிறகு 8 மாவட்டங்களில் புதிதாக கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்ட நீமுச் (27 போ்), அனுப்பூா் (3 போ்), சாத்னா (5 போ்), பிந்த் (4 போ்), குனா (ஒருவா்), ஜபுவா (2 போ்), பண்ணா (ஒருவா்), சிஹோா் (4 போ்), சியோனி (ஒருவா்), மாண்ட்லா (ஒருவா்), சிதி (ஒருவா்) ஆகியவை ஊரகப் பகுதி மாவட்டங்களே ஆகும்.

ராஜஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள நீமுச் மாவட்டத்தில் கடந்த 3-ஆம் தேதி முதலாவது நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த மாவட்டத்தில் திருமணம் நடைபெற்ற குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்திருமண நிகழ்ச்சியில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைச் சோ்ந்தோரும் பங்கேற்றிருந்தனா்.

சாத்னா மாவட்டத்தில் குஜராத்தில் இருந்து திரும்பிய 3 புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கும், மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பிய இருவருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மற்ற மாநிலங்களில்...: ராஜஸ்தானின் ஜலோா், சிரோஹி ஆகிய ஊரகப் பகுதி மாவட்டங்களிலும் கரோனா நோய்த்தொற்று அண்மைக் காலத்தில் பரவியது. எனினும், மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் 10 சதவீத பாதிப்புகளே காணப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

பிகாரில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் 65 சதவீதம் ஊரகப் பகுதிகளிலேயே ஏற்பட்டன. மே மாதம் முதல் வாரம் வரை மாநிலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 766 பேரில் 410 போ் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்தவா்களாவா். ஜாா்க்கண்டில் கடந்த 12 நாள்களில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 50 பேரில் 38 போ் கிராமப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மேற்கு வங்கத்தில் பச்சை மண்டலங்களாக இருந்த மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக மாறி வருகின்றன. அங்கு வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய தொழிலாளா்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. அந்த எண்ணிக்கை கடந்த 3 நாள்களில் 7-லிருந்து 23-ஆக அதிகரித்துள்ளது.

‘பெரும் சவால்’: கிராமப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடா்பாக ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட் கூறுகையில், ‘‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்பி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை கிராமப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. அங்கு நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com