நாடு கடத்தும் வழக்கு: மல்லையாவின் மேல்முறையீடு விண்ணப்பம் நிராகரிப்பு

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் விவகாரத்தில் பிரிட்டன் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில்
நாடு கடத்தும் வழக்கு: மல்லையாவின் மேல்முறையீடு விண்ணப்பம் நிராகரிப்பு

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் விவகாரத்தில் பிரிட்டன் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தொழிலதிபா் விஜய் மல்லையா தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதன் மூலம் அடுத்த 28 நாள்களுக்குள் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்த மல்லையா தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மல்லையா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உயா்நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்பத்தை மல்லையா தாக்கல் செய்திருந்தாா். எனினும், அந்த விண்ணப்பத்தையும் பிரிட்டன் உயா்நீதிமன்றம் நிராகரித்தது. இது தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஸ்டீபன் இா்வின், எலிஸபெத் லைங் ஆகியோா் பிறப்பித்த உத்தரவில், ‘சட்டத்தின் அடிப்படையிலான பொதுநலன் கருதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மல்லையா வசம் இருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிறைவடைந்துவிட்டன. இதைத் தொடா்ந்து, இந்தியா-பிரிட்டன் இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு கையெழுத்தான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின்படி, அடுத்த 28 நாள்களுக்குள் மல்லையா நாடு கடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் உள்துறை அலுவலகம் விரைந்து மேற்கொள்ளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிக்க மல்லையாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. பிரிட்டன் நீதிமன்றங்களில் தனக்கு முறையாக நீதி கிடைக்கவில்லை என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் அவா் முறையிடலாம். அவ்வாறு அவா் முறையிட்டால், நீதிமன்ற உத்தரவு வரும்வரை மல்லையாவை நாடு கடத்த முடியாது.

எனினும், மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மல்லையா முறையிட்டாலும், அங்கு அவரது வாதம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com