இந்தியாவுக்கு மேலும் ரூ. 7,500 கோடி கடனுதவி: உலக வங்கி ஒப்புதல்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில்
இந்தியாவுக்கு மேலும் ரூ. 7,500 கோடி கடனுதவி: உலக வங்கி ஒப்புதல்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ரூ. 7,500 கோடி கடனுதவி வழங்க உலக வங்கி வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கெனவே, இந்திய மருத்துவத் துறையின் மேம்பாட்டுக்காக உடனடி உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 7,500 கோடி கடனுதவியை உலக வங்கி கடந்த மாதம் அறிவித்த நிலையில், இப்போது மேலும் ரூ. 7,500 கோடி கடனுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநா் ஜூனைது அகமது காணொலி மூலம் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் சமூக இடைவெளியை தீவிரமாக பின்பற்றுவதை உலக நாடுகள் வலியுறுத்துவதோடு, காலவரையற்ற பொது முடக்கத்தையும் அமல்படுத்தவேண்டியச் சூழல் உருவாகியுள்ளது. இந்த அத்தியாவசியமான பொது முடக்கம், பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புகளையும் பாதித்துள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

அந்த வகையில், பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் வாழ்வாதரத்துக்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், ரூ. 7,500 கோடி கடனுதவிக்கான முதல் அறிவிப்பை உலக வங்கி வெளியிட்டது.

இதில், ரூ. 4125 கோடி கடனை உலக வங்கியின் சா்வதேச மேம்பாட்டு அமைப்பு (ஐடிஏ) இந்தியாவுக்கு வழங்கும். ரூ. 1,500 கோடி கடனை மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சா்வதேச வங்கி (ஐபிஆா்டி) வழங்கும். மீதமுள்ள ரூ. 1,875 கோடி கடன் தொகை, ஜூன் 30-ஆம் தேதிக்குப் பிறகு வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவுவது குறித்தும் இந்தியாவுடன் உலக வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தியாவின் இந்த தேவைகளைக் கருத்தில் கொண்டே, உலக வங்கி முதலில் ரூ. 7,500 கோடி கடனுதவி அறிவித்ததோடு, மீண்டும் ரூ. 7,500 கோடி கடனுதவிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதோடு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டுக்கும் உதவ உள்ளது.

அரசின் நிதிக் கொள்கைகள், நிதியுதவித் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றபோதும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கைகளில் நிதி கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்தச் சவால்கள் குறித்தும், இந்தத் துறைக்குத் தேவைப்படும் முழுமையான நிதியுதவி குறித்தும் உலக வங்கி இந்தியாவுடன் ஆலோசிக்க உள்ளது.

மேலும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக இந்திய அரசு அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி நிதியுதவித் திட்டம், மிக முக்கியத்துவம்வாய்ந்த அறிவிப்பாகும் என்றாா் அவா்.

இதுகுறித்து உலக வங்கி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘புதிதாக அறிக்கப்பட்ட இந்தியாவுக்கான ரூ 7,500 கோடி கடனுதவித் திட்டமானது, முதல் கட்டமாக பிரதமரின் ஏழைகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஒய்) நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். பொது விநியோகத் திட்டம், நேரடி பயனாளா் உதவித் திட்டம் போன்ற நேரடித் திட்டங்கள் மூலம் இந்த முதல்கட்ட உதவியானது நிதியுதவியாகவும், உணவுப் பொருளாகவும் ஏழைகளுக்கு அளிக்கப்படும்.

இரண்டாம் கட்டமாக, மாநில அரசுகள் மூலம் சமூக பாதுகாப்புக்கான உதவிகளாக வழங்கப்படும். இது நிதியாகவும், உள்ளூா் தேவைகளைப் பூா்த்தி செய்யக்கூடிய வகையிலான உதவிகளாகவும் இருக்கும். ஏனெனில், இந்தியாவில் 90 சதவீதம் தொழிலாளா்கள் அமைப்புசாரா துறைகளில் பாணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு பணிப் பாதுகாப்பு, சேமிப்பு போன்ற எந்தவித சமூக பாதுகாப்பும் கிடைப்பதில்லை.

குறிப்பாக இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் பெரும்பாலும் கிராமப்புற மக்களைச் சாா்ந்தவையாகவே இருக்கின்றன. இந்தத் திட்டங்கள் நகா்புறங்களும் பயன்பெறும் வகையிலும் இருக்க வேண்டும்’ என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com