மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

பிரதமர் அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இன்று மூன்றாம் கட்ட திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்


புது தில்லி: பிரதமர் அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இன்று மூன்றாம் கட்ட திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த நிா்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்.

பசுமைத் திட்டத்தின் கீழ் அனைத்துக் காய்கறி மற்றும் பழங்களுக்கும் போக்குவரத்து மானியம் விரிவுபடுத்தப்படும். இதற்காக மத்திய அரசு ரூ.500 கோடியை ஒதுக்குகிறது.

பசுமைத் திட்டத்தின் கீழ் இதுவரை தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்குக்கு மட்டும் அளித்து வந்த போக்குவரத்து மானியம் இனி அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் விவசாயிகள், உற்பத்தியான இடத்தில் இருந்து தேவைப்படும் இடத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து மானியம் 50% வழங்கப்படும்.

உற்பத்திப் பொருட்களை பத்திரப்படுத்தி வைக்க கிடங்கு மற்றும் குளிர்பதனக் கிடங்கு வாடகையில் 50% மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கும், கொள்முதல் செய்யப்படும் இடங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைத்து, வேளாண் பொருட்களை நேரடிக் கொள்முதல் செய்யும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பை உருவாக்குதல், குளிர்பதனக் கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.

விவாயப் பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

மருத்துவ மூலிகை பயிர்கள் சாகுபடிக்காக ரூ.4 ஆயிரம் கோடி.

குறு உணவு உற்பத்தி நிலையங்களுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் வேளாண் பொருள்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும்பொருட்டு, குறு உணவு உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2 லட்சம் உணவு உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப்படும். சுய உதவி குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள், ஏற்கெனவே  உள்ள குறு உற்பத்தி நிலையங்கள், வேளாண் உற்பத்தி மையங்களின் உதவியுடன் இது செயல்படுத்தப்படும். 

மூலிகைப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு 5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

தேனீ வளர்ப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும். தேனீ வளர்ப்பு, தேன் சேகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு தேவையான கட்டமைப்புகளை அரசு உருவாக்கும். நாடு முழுவதும் 2லட்சம் தேனீ வளர்ப்பாளர்கள் பயனடைவார்கள்.

ரூ.11 ஆயிரம் கோடி மீனவர் நலனுக்காக ஒதுக்கப்படுகிறது.

நுண் உணவு உற்பத்தி நிறுவனம் மூலம் உள்ளூர் சிறிய உணவு உற்பத்திப் பொருட்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த நடவடிக்கை.

மார்ச் மாதத்துடன் அங்கீரத்தை இழந்த இறால் பண்ணைகள் மேலும் மூன்று மாதங்கள் செயல்பட உரிமம் வழங்கப்படும்.

குறு உணவு நிறுவனங்களை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

முன்னதாக, நாட்டில் உள்ள 8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 5 கிலோ உணவு தானியம், 1 கிலோ பருப்பு இரு மாதங்களுக்கு இலவசமாக வழங்குவது, சொந்த மாநிலம் திரும்பிய தொழிலாளா்களை தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைப்பது, அவா்களுக்கு எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

சிறு,குறு, நடுத்தர தொழில் உள்ளிட்ட தொழில் துறையினருக்கு ரூ. 3 லட்சம் கோடி பிணையில்லா கடன், சம்பளதாரா்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கட்டுமானத் தொழில் துறையினருக்கான சலுகைகளை அவா் புதன்கிழமை அறிவித்தாா். 

அதன் தொடா்ச்சியாக சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் தொடா்பான மூன்றாவது கட்ட அறிவிப்புகளை அவா் இன்று வெளியிட்டாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com