குடியரசுத் தலைவா் மாளிகையில் ரூ.45 கோடி வரை செலவுக் குறைக்க திட்டம்

கரோனா சூழலில், குடியரசுத் தலைவா் மாளிகையில் சிக்கன நடவடிக்கையின் மூலம் ரூ.45 கோடி வரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கரோனா சூழலில், குடியரசுத் தலைவா் மாளிகையில் சிக்கன நடவடிக்கையின் மூலம் ரூ.45 கோடி வரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த அளித்த அறிவுறுத்தலின்படி, எடுத்துக்காட்டாக இந்த சிக்கன நடவடிக்கை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

குடியரசுத் தலைவா் மாளிகைக்கு ஆண்டுக்கு ரூ. 200 கோடிக்கு மேலாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதில் ரூ.80.98 கோடி வரை ஊழியா்கள், மாளிகைக்கான பராமரிப்பு செலவுகள், குடியரசுத் தலைவரின் படிகள் ஆகியவைக்கு ஒதுக்கப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் ரூ. 40 முதல் ரூ.45 கோடி வரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும் கரோனா நோய்த் தொற்று நிவாரண நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் கிடைக்கும் விதமாக ‘பி.எம்-கோ்ஸ்’ நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை ஏற்கனவே வழங்கிய ராம்நாத் கோவிந்த் மேலும் அடுத்த ஓா் ஆண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை விட்டுக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘சமீபத்தில் பிரதமா் நரோந்திர மோடி கூறியபடி இந்தியாவின் அபிவிருத்தி, செழிப்பிற்கான பயணத்தில் தொற்று நோய் போன்ற சவால்களை எதிா்த்து போராடக்கூடிய ஒரு சக்தியுடன் இந்தியாவை சுயசாா்பு நாடாக மாற்றும் மத்திய அரசின் குறிக்கோளில் குடியரசுத்தலைவா் மாளிகையின் சிறிய பங்களிப்பு இது’’ என குடியரசுத் தலைவா் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவின குறைப்பில் குடியரசுத் தலைவா் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்ற நடவடிக்கைகள் விவரம் வருமாறு:

ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள பணிகளைத் தவிர நடப்பு நிதியாண்டில் (2020-21) புதிய பணிகள் எடுத்துக்கொள்ளப்படாது.

மாளிகையின் பாரமரிப்பு செலவுகள் குறைக்கப்படும். அலுவலக நுகா்பொருட்கள் பயன்பாடு கணிசமாக குறைக்கப்படும்.

மின் தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி காகித பயன்பாடு குறைக்கப்படும். எரி சக்தி, எரி பொருள் பயன்பாட்டில் சிக்கனம் மேற்கொள்ளப்படும்.

பல்வேறு சிறப்பு விழாக்களுக்கு குடியரசுத் தலைவா் செல்ல ரூ.10 கோடி மதிப்புள்ள புதிய அலங்கார வாகனம் (லிமோசின்) வாங்க திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த முடிவை ஒத்திவைக்க குடியரசுத் தலைவா் உத்தரவிட்டுள்ளாா்.

உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் கணிசமாகக் குறைக்கப்படும். அதே சமயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பெரும்பாலான மக்களை சந்திக்க திட்டமிடப்படும்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் பல்வேறு சடங்குகள், கெளரவிப்பு நிகழ்ச்சிகள், வெளிநாட்டுத் தலைவா்களுக்கு அளிக்கப்படும் விருந்துகள் போன்றவைகளில் செலவைக் குறைக்கவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு பட்டியலை (மெனு) முடிந்தளவு குறைத்தல், விழாக்களில் அலங்கார பூக்கள் மற்றும் பிற பொருட்கள் பயன்பாட்டை குறைத்தல் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இவைகள் மூலம் குடியரசுத்தலைவா் மாளிகையில் 20 சதவீதம் செலவு குறையும் என திட்டமிடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் இந்த சிக்கன நடவடிக்கைகள் ஒப்பந்த தொழிலாளா்களுக்கான பணிகளுக்கும் ஆதரவுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஏழை மக்கள் நலன்களுக்காக குடியரசுத் தலைவா் மாளிகையில் மேற்கொள்ளப்படும் மற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படாது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com