உலகம் முழுவதும் சுமார் 2.80 கோடி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைப்பு

கரோனா தொற்று பாதிப்பினால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், உலகம் முழுவதும் சுமார் 2.80 கோடி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் சுமார் 2.80 கோடி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைப்பு


லண்டன்: கரோனா தொற்று பாதிப்பினால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், உலகம் முழுவதும் சுமார் 2.80 கோடி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஏராளமான நோயாளிகள் இன்னும் சிறிது காலம் தங்களது நோய்களுடனே போராடிக் கொண்டு, மறுபக்கம் கரோனா தொற்றுடனும் வாழப் பழகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுமார் 120 நாடுகளின் புள்ளி விவரங்களை ஒருங்கிணைத்த கோவிட்சர்ஜ் ஒருங்கிணைப்புக் குழுவினர், உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அறுவை சிகிச்சைகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு நடத்தினர்.

கரோனா தொற்று காரணமாக சுமார் 190 நாடுகளில், திட்டமிடப்பட்ட கோடிக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், இதன் விகிதம் 72.3 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியார்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், உலகம் முழுவதும் சுமார் 2 கோடியே 80 லட்சம் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனைக்கு வருவதன் மூலம் நோயாளிகளுக்கு கரோனா தொற்று பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், முக்கிய அறுவை சிகிச்சைகளைக் கூட ஒத்திவைக்குமாறு உலக நாடுகள் அறிவுறுத்தியிருந்தன.

ஆனால், மிக அவசியமான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பது நோயாளிகளுக்கும், சமுதாயத்துக்கும் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். ஒன்று நோயாளியின் உடல்நிலை மோசமடையலாம், அல்லது அவர்களது வாழ்க்கைத் தரம் மோசமடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பாமல் ஒவ்வொரு வாரத்தைக் கடக்கும் போதும், கூடுதலாக ஒவ்வொரு வாரமும் சுமார் 43 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும் என்றும் பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com