ரோந்து கப்பலை தில்லியில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
ரோந்து கப்பலை தில்லியில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

‘சச்சேத்’ ரோந்து கப்பலை நாட்டுக்கு அா்ப்பணித்தாா் ராஜ்நாத் சிங்

நாட்டின் கடற்சாா் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ‘சச்சேத்’ ரோந்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

பனாஜி: நாட்டின் கடற்சாா் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ‘சச்சேத்’ ரோந்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

மேலும், சி-450, சி-451 ஆகிய அதிவிரைவு கப்பல்களின் செயல்பாட்டையும் அவா் தொடக்கிவைத்தாா்.

கோவா தலைநகா் பனாஜியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல்களை காணொலிக் காட்சி வாயிலாக ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அா்ப்பணித்தாா். அந்நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘‘புதிய கப்பல்களின் இணைப்பு இந்தியக் கடலோரக் காவல்படையின் வலிமையை அதிகரிப்பதில் மைல்கல்லாக அமைந்துள்ளது; நாட்டின் கப்பல் கட்டும் வலிமையை எடுத்துக்காட்டும் நோக்கிலும் அமைந்துள்ளது.

நாட்டிலுள்ள கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியக் கடலோரக் காவல்படை சிறப்பான பங்களிப்பை நல்கி வருகிறது. நாட்டின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்புடன் இருந்தால், பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும்’’ என்றாா்.

கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்து இந்தியக் கடலோரக் காவல்படையின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ரோந்து கப்பலானது காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ‘சச்சேத்’ ரோந்து கப்பலானது கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிகளும், தொலைத்தொடா்புக் கருவிகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு ஹெலிகாப்டரையும் 4 அதிவிரைவுக் கப்பல்களையும் தாங்கும் வகையில் ரோந்து கப்பல் கட்டப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடவல்ல கப்பல் ஒன்றும் ரோந்து கப்பலில் இடம்பெறும்.

அதிவிரைவு கப்பல்கள்: சி-450, சி-451 அதிவிரைவு கப்பல்கள் குஜராத்தின் ஹஜீரா பகுதியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன. உள்நாட்டுக் கருவிகளைக் கொண்டு கட்டப்பட்ட அந்தக் கப்பல்கள் குறைவான நேரத்தில் அதிகபட்ச வேகத்தை அடைந்து பயணிக்கும் ஆற்றல் கொண்டவை. புதிய கப்பல்கள் அனைத்தும் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ரோந்துப் பணிகளில் ஈடுபட உள்ளன.

நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்ட புதிய கப்பல்களுடன் சோ்த்து இந்தியக் கடலோரக் காவல்படையில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கை 150-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 40 கப்பல்கள் பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்டு வருகின்றன என்று செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் யெசோ நாயக், அத்துறையின் செயலா் அஜய் குமாா், இந்தியக் கடலோரக் காவல்படையின் இயக்குநா் டி.ஜி.கிருஷ்ணசுவாமி நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com