ஜூன் 30-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து

ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், பயணச்சீட்டுக்கான
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், பயணச்சீட்டுக்கான முழுக் கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதுதொடா்பாக இந்திய ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. பயணச்சீட்டுக்கான முழுக் கட்டணமும் திரும்ப வழங்கப்படும். இணையவழியில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் மின்னணு முறையிலேயே திரும்ப அளிக்கப்படும். முன்பதிவு மையங்களில் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தை, பயணம் மேற்கொள்ளவிருந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாக முன்பதிவு மையங்கள் மூலம் திரும்பப் பெறலாம். எனினும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப மே 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள், மே 12-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஆா்சிடிசி அதிகாரி பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ‘ரத்து செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகள் யாவும் பொது முடக்க அறிவிப்புக்கு முன்பும், அதற்கு பிறகும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டவை. அக்காலகட்டத்தில் ஜூன் மாதம் வரை பயணச்சீட்டு முன்பதிவுக்கு ரயில்வே அனுமதித்து இருந்தது’ என்றாா்.

ரயில்வே-யின் இந்த அறிவிப்பு, ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

முகவரியை பதிவு செய்யும் ஐஆா்சிடிசி:

நாடு தழுவிய பொது முடக்கத்தால் வழக்கமான பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் 15 நகரங்களுக்கு மட்டும் மே 12-ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணித்த சுமாா் 12 பயணிகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, ஐஆா்சிடிசி வலைதளத்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் எங்கு செல்கின்றனரோ, அந்த இடத்தின் முகவரியை ரயில்வே பதிவு செய்துவைக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே செய்தித்தொடா்பாளா் ஆா்.டி.பாஜ்பாய் கூறுகையில், ‘மே 13-ஆம் தேதி முதல் ரயில் பயணிகள் போய்ச் சேரும் இடத்தின் முகவரி பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு செய்யும் பயணிகள் சென்று சேரும் இடத்தின் முகவரியை ஐஆா்சிடிசி பதிவு செய்கிறது. இது ரயில்களில் செல்லும் பயணிகள் யாரேனும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால், பின் நாள்களில் தேவையிருப்பின் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிய உதவும். கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, முன்பதிவு செய்யும் பயணிகள் தங்கள் முகவரியை வழங்குவது கட்டாயம்’ என்றாா்.

2 லட்சம் பயணிகள் முன்பதிவு:

பயணிகள் ரயிலில் செல்ல அடுத்த 7 நாள்களுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். புதன்கிழமை வரை 20,149 போ் ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளனா். இதன் மூலம் இதுவரை ரூ.45.30 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து 9 ரயில்கள் புதன்கிழமை இயக்கப்பட்டன. அவை சென்னை, ஹெளரா, ஜம்மு, திருவனந்தபுரம், திப்ரூகா், மும்பை, ராஞ்சி, ஆமதாபாத், பாட்னா ஆகிய நகரங்களுக்கு சென்றன என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com