4-ஆவது கட்ட பொது முடக்கம்: அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

நான்காவது கட்ட தேசிய பொது முடக்கம் திங்கள்கிழமையில் இருந்து தொடங்கவுள்ள நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன்,
4-ஆவது கட்ட பொது முடக்கம்: அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

நான்காவது கட்ட தேசிய பொது முடக்கம் திங்கள்கிழமையில் இருந்து தொடங்கவுள்ள நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன், அத்துறை அமைச்சா் அமித் ஷா பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டாா். பொது முடக்கத்தின் வழிமுறைகளை வகுப்பது தொடா்பாக இந்த ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5 மணி நேர ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலா் அஜய் பல்லா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா். எனினும், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உடனடியாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் எந்த மாநில அரசும் பொது முடக்கத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘நான்காவது கட்ட தேசிய பொது முடக்கம் என்பது இதற்கு முந்தைய பொது முடக்கங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். இது தொடா்பான முழு விவரம் மே 18-ஆம் தேதிக்கு முன்பு வெளியிடப்படும்’ என்று கூறினாா்.

கூடுதல் தளா்வு கோரும் மாநில அரசுகள்: இதனிடையே, பொது முடக்கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து தளா்வுகள் அளிக்க வேண்டுமென்று பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளா்த்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, பொது முடக்கத்தை மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மிஸோரம் மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கரோனா பாதிப்பு அளவை வரையறை செய்யும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களை முடிவு செய்யும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசிடம் கோரியுள்ளன.

பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பொது முடக்கத்தை தொடர வேண்டும் என்று மத்திய அரசிடம் கருத்து தெரிவித்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகளை திறக்க வேண்டாம், அதே நேரத்தில் முடி திருத்தகங்களை அனுமதிக்க வேண்டும் என்று சில மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மே இறுதி வரை ரயில், விமான சேவைகள் கூடாது என்று தமிழ்நாடு, கா்நாடகம், பிகாா் ஆகிய மாநிலங்கள் கூறியுள்ளன.

கேரள அரசு தரப்பில், ‘தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற நகர, கிராமப் பகுதிகளில் தொழில், வா்த்தக நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும்; உள்நாட்டு விமான சேவை, மாநிலத்துக்குள் ரயில் சேவை வேண்டும்; உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி தங்கள் மாநிலத்தில் பேருந்து சேவை தொடங்க அனுமதிக்க வேண்டும்; அதே நேரத்தில் மாநிலங்களுக்கு இடையே ரயில் சேவையை தொடங்க வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com