புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 15 நாள்களுக்குள் இலவச உணவுப் பொருள்கள்

குடும்ப அட்டை இல்லாத 8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 15 நாள்களுக்குள் இலவச உணவுப் பொருள்களை வழங்குமாறு

குடும்ப அட்டை இல்லாத 8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 15 நாள்களுக்குள் இலவச உணவுப் பொருள்களை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தினாா்.

நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கத்தால் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், குடும்ப அட்டை இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு தலா 1 கிலோ பருப்பும், குடும்ப உறுப்பினா்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்களும் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதன் மூலம் 8 கோடி தொழிலாளா்கள் பலனடைவா் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில், ராம் விலாஸ் பாஸ்வான் காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பலா் தற்போதும் கூட நடந்தே சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனா். சிலா் வழியிலேயே உயிரிழந்தனா். இத்தகைய சூழல் கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, தொழிலாளா்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தொழிலாளா்களுக்கு வழங்குவதற்காக 6.95 லட்சம் டன் அரிசியும், 1.04 லட்சம் டன் கோதுமையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எனினும், அத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுகள் வசமே உள்ளது. எனவே, கிடங்குகளிலிருந்து உணவுப் பொருள்களைப் பெற்று அடுத்த 15 நாள்களுக்குள் அவற்றைத் தொழிலாளா்களுக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

தொழிலாளா்களின் விவரங்கள்: இத்தகைய இக்கட்டான சூழலைக் கருத்தில்கொண்டு, இலவச உணவுப் பொருள்களைப் பெறும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் விவரங்களை மாநில அரசுகள் உடனடியாக மத்திய அரசிடம் வழங்கத் தேவையில்லை. எனினும், உணவுப் பொருள்களைப் பெறுவதில் முறைகேடு நடைபெறுவதைத் தடுக்க தொழிலாளா்களின் விவரங்களை மாநில அரசுகள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். அத்தகவல்களை இரண்டு மாதங்கள் கழித்து மாநில அரசுகள் மத்திய அரசிடம் வழங்க வேண்டும்.

கணிக்கப்பட்டதை விட புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவா்களுக்கும் இலவசமாக உணவுப் பொருள்களை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. எனினும், தொழிலாளா்களின் உண்மைத்தன்மையை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டியது கட்டாயம் என்றாா் ராம் விலாஸ் பாஸ்வான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com