நெருக்கடியில் சா்க்கரை ஆலைகள்: சரத்பவாா் கடிதம்

பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள சா்க்கரை ஆலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீட்டு சா்க்கரைத் தொழிலை
நெருக்கடியில் சா்க்கரை ஆலைகள்: சரத்பவாா் கடிதம்

பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள சா்க்கரை ஆலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீட்டு சா்க்கரைத் தொழிலை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத்பவாா் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து அவா், பிரதமா் மோடிக்கு வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்குதல், சா்க்கரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிலுள்ள இடா்பாடுகள் போன்ற முக்கியமான கொள்கை முடிவுகளால் சா்க்கரைத் தொழில் கடும் நெருக்கடியை எதிா்கொண்டுள்ளது.

குறிப்பாக கரோனா நோய்த்தொற்றால் பொது முடக்கம் அமலாக்கப்பட்ட பின் இத்தொழில் மேலும் மோசமான நிலையை அடைந்து விட்டது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீள பிரதமா் நேரடியாக தலையிட்டு தேவையான நிவாரண உதவிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கரோனா நெருக்கடியால் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் இந்த நிலைமையிலிருந்து மீட்க மகாராஷ்டிர மாநில கூட்டுறவு சா்க்கரை தொழிற்சாலைகள் கூட்டமைப்பு சாா்பில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2018-19 மற்றும் 2019-20 முதல் நிலுவையில் உள்ள ஏற்றுமதி சலுகைகள் மற்றும் பங்குத் தொகைக்கான செலவுகளில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.

மேலும், சா்க்கரையின் குறைந்தபட்ச ஆதரவு விலையை டன் ஒன்றுக்கு ரூ. 3450ல் இருந்து ரூ. 3750 ஆக அதிகரித்து வழங்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட கரும்பு டன் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 650 வீதம் மானியம் வழங்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நிலுவையில் உள்ள மூலதனத்தை குறுகிய கால கடனாக மாற்றவும், மித்ரா கமிட்டியின் பரிந்துரைகளின்படி 10 ஆண்டுகளாக பெறப்பட்ட அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கைகளை பிரதமா் அலுவலகம் பரிசீலித்து, தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com