புலம்பெயர் தொழிலாளர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல தயார்: ஸ்பைஸ் ஜெட் தலைவர்

​புலம்பெயர் தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்புவது பற்றிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல தயார்: ஸ்பைஸ் ஜெட் தலைவர்


புலம்பெயர் தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தயாராகவே இருக்கிறது என்று நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரான அஜய் சிங் தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், 'எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரசன்ஸ்' என்ற தலைப்பில் நடத்தி வரும் தொடர் இணையவழி கலந்துரையாடலில் சிறப்பு அழைப்பாளராக அஜய் சிங் பங்கேற்று பேசினார். இந்தக் கலந்துரையாடலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரிய குழாம் இயக்குநர் பிரபு சாவ்லா, பொருளாதார வல்லுநர் சங்கர் அய்யர், இந்திய வர்த்தக சபையின் இயக்குநர் ராஜீவ் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கலந்துரையாடலின்போது, கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அஜய் சிங், புலம்பெயர் தொழிலாளர்களை விமானம் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவித்ததாகவும், ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் இப்போதும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

"புலம்பெயர் தொழிலாளர்களை பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய 5-6 நாள்கள் பேருந்துப் பயணங்களின் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக இரண்டரை மணி நேர பயணத்தில் விமானங்கள் மூலம் அனுப்பலாம் என்று நாங்கள் தெரிவித்தோம்.

அரசு இதை ஏற்றுக்கொண்டிருந்தால், 600-700 விமானங்கள் இருப்பதனால் புலம்பெயர் தொழிலாளர்களின் பயணம் எளிதாகவும் விரைவாகவும் முடிந்திருக்கும். விமானம் மூலம் ஒரு நாளைக்கு 1,000 பயணிகள் வரை எளிதாக பயணிக்கலாம். ஆக 5 லட்சம் பேரை இடம்பெயர வைத்திருக்க முடியும். ஆனால், இதில் சில பிரச்னைகளும் உள்ளன" என்றார்.

மேலும் அரசுத் தரப்பிலிருந்து இதற்கு எந்தப் பதிலும் இல்லை என்று கூறிய அவர், வரையறுக்கப்பட்ட இடம் காரணமாக விமானப் பயணம் பாதுகாப்பானதாக இருக்காது, விமானப் பயணத்துக்கான செலவும், விமானத்தில் காற்றோட்டமும் அரசின் மௌனத்துக்கான காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, இதுபற்றி அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்படுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், எங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.

மேலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்னும் ஒரு வாரத்தில் (மே 22) படிப்படியாக இயக்கப்படும் என்றும், வெளிநாட்டு விமானப் போக்குவரத்து தொடங்க இன்னும் சில மாதங்களோ அல்லது கூடுதலாகவோ ஆகலாம் என்றும் தெரிவித்தார்.

விமானத் துறை சந்தித்திருக்கும் மிகப் பெரிய நெருக்கடியைப் பற்றி அவர் பேசுகையில், "விமானப் போக்குவரத்துத் துறை மிகப் பெரிய அளவில் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கான சலுகைகள் பற்றி விமானப் போக்குவரத்துத் துறையிடம் முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது. நிதித் துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கும் இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால், நாங்கள் விரைவில் மீண்டு வருவோம். ஒருவேளை அது இல்லாவிட்டாலும், நாங்கள் மீண்டு வருவோம். காரணம், நாங்களும் இந்தியாவைப் போல் எழுச்சி பெற்று வரக் கூடியவர்கள்.

ஊதியம் நிறுத்தப்பட்டாலும், ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டாலும்கூட எந்தவொரு ஊழியரையும் பணியிலிருந்து நீக்கவில்லை.

இந்தியாவில் ஏறத்தாழ விமானக் கட்டணத்தில் பாதிக்கும் மேலாக அரசுக்கு வரியாக செலுத்தப்படுகின்றன. உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அரசு ஆதரவளித்தால், ஒரு துறையாக சிறப்பாக செயல்பட முடியும். அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு நாங்கள் கேட்கிறோம். இதன்மூலம், விமானத் துறையில் நாம் செல்வாக்கு பெறுவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார். 

இந்த நெருக்கடி காலத்தில் மத்திய அரசின் உடான் திட்டம் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி ராஜீவ் சிங் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கையில், "இந்தத் திட்டம் வெற்றிகரமான ஒன்று. குறிப்பாக பிரதமர் மோடிக்கு பிடித்தமான ஒன்று என்பதால், இந்தத் திட்டம் மோசமான பாதிப்பைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. புது தில்லியிலிருந்து மும்பைக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகிறது என்றால், 19-வதாக ஒரு விமானம் இயக்கப்படுவதன் மூலம் எந்தப் பயனும் இல்லை. அதுவே 2-ஆம் நிலை அல்லது 3-ஆம் நிலை நகரங்களுக்கு விமானங்களை இயக்கினால், அதன்மூலம் கூடுதல் லாபம் ஈட்டலாம்" என்று ஸ்பைஸ் ஜெட் தலைவர் அஜய் சிங் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com