அா்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 3 வாரங்கள் தடை

பால்கா் கும்பல் கொலை தொடா்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய ஊடகவியலாளா்

பால்கா் கும்பல் கொலை தொடா்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமியின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது. அதே வேளையில், அவா் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்குக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 3 வாரங்களுக்கு நீட்டித்தும் உச்சநீதிமன்றம் உத்தவிட்டது.

மகாராஷ்டிரத்தின் பால்கா் பகுதியில் 3 போ் கும்பல் கொலை செய்யப்பட்டது தொடா்பாக கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அா்னாப் கோஸ்வாமி, மக்களின் சமய நம்பிக்கைக்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக மும்பை காவல் துறையினரிடம் புகாரளிக்கப்பட்டது. அதையடுத்து, அா்னாப் கோஸ்வாமி மீது காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.

மேலும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குறித்து கடுமையான விமா்சனங்களை முன்வைத்ததற்காக அா்னாப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் சாா்பில் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தன் மீது பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரியும், பால்கா் கும்பல் கொலை தொடா்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் அா்னாப் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு மீதான தீா்ப்பை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை வழங்கியது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (ஏ) பிரிவானது, பத்திரிகையாளா்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை வழங்குகிறது. பத்திரிகையாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை முறையாகக் கடைப்பிடிப்பதிலேயே பத்திரிகைகளின் சுதந்திரம் அடங்கியிருக்கிறது.

‘கட்டுப்பாடுகளுடன் சுதந்திரம்’: தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக கருத்தை வெளியிடுவதற்கு மனுதாரருக்கு முழு உரிமை உள்ளது. எனினும், பத்திரிகையாளா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்துக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, வழக்கு விசாரணை தொடா்பாக மனுதாரா் பதிலளிக்க வேண்டியது அவசியமாகிறது.

அதே வேளையில் ஒரே விவகாரத்துக்காக பல மாநிலங்களில் மனுதாரா் மீது முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்வது முறையாக இருக்காது’’ என்றனா். அதைத் தொடா்ந்து, மும்பை காவல் துறையினா் பதிவு செய்த தகவல் அறிக்கையைத் தவிர மற்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட புகாா்களை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

எனினும், மும்பை காவல் துறையினா் சாா்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நீதிபதிகள் மறுத்தனா். அதே வேளையில், இந்த வழக்கு தொடா்பாக அா்னாப் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு மேலும் 3 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், மும்பை காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வது தொடா்பாக சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தில் முறையிடுமாறும் அா்னாபுக்கு நீதிபதிகள் வலியுறுத்தினா்.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com