காங்கிரஸின் பேருந்துகள் பட்டியலில் ஆட்டோ, பைக் இடம்பெற்றுள்ளன: உ.பி அரசு குற்றச்சாட்டு; காங்கிரஸ் மறுப்பு

புலம்பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பவதற்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள 1,000 பேருந்துகள் பட்டியலில் பைக், ஆட்டோ பதிவெண்களும் இருப்பதாக உத்தரப் பிரதேச அரசு குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸின் பேருந்துகள் பட்டியலில் ஆட்டோ, பைக் இடம்பெற்றுள்ளன: உ.பி அரசு குற்றச்சாட்டு; காங்கிரஸ் மறுப்பு


புலம்பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பவதற்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள 1,000 பேருந்துகள் பட்டியலில் பைக், ஆட்டோ பதிவெண்களும் இருப்பதாக உத்தரப் பிரதேச அரசு குற்றம்சாட்டியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை உத்தரப் பிரதேச மாநில எல்லையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து வசதிக்கு காங்கிரஸ் கட்சி 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இதற்கான ஒப்புதலை உத்தரப் பிரதேச அரசு திங்கள்கிழமை வழங்கியது. அதேசமயம், பேருந்துகளின் பட்டியல் மற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பட்டியல்களையும் உத்தரப் பிரதேச அரசு கோரியிருக்கிறது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "நாங்கள் முதற்கட்ட ஆய்வை நடத்தி முடித்துள்ளோம். அதில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள்கூட காங்கிரஸ் அளித்த 1,000 பேருந்துகள் பட்டியலில் உள்ளடங்கியிருப்பது தெரியவந்தது. புலம்பெயர் தொழிலாளர்கள் மீது காங்கிரஸ் கட்சி குறைந்த அளவிலான அக்கறையைக் கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த முறைகேட்டில் ஈடுபடுவது ஏன் என்பதற்கு சோனியா காந்தி பதிலளிக்க வேண்டும். பேருந்துகளின் தரச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் தகவல்களைச் சேகரிப்பது அரசின் பொறுப்பாகும்" என்றார்.

இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அஜய்குமார் லல்லு தெரிவிக்கையில், "தொடக்கத்தில் இந்தப் பேருந்துகளுக்கு அனுமதியளிக்க உத்தரப் பிரதேச அரசு மூன்று நாள்கள் இழுத்தடித்தது. மக்களைக் குழப்புவதற்கு அரசு முயற்சிக்கிறது. அவர்கள், அரசியல் செய்வதற்காக உள்நோக்கத்துடன் போலி பதிவெண்களை உருவாக்குகின்றனர். பேருந்துகளின் பதிவெண்களை நாங்கள் வழங்கியுள்ளோம். நாங்கள் அதை பகிரங்கமாக வெளியிட்டால், சரிபார்த்துக் கொள்ளலாம்" என்றார்.

இதனிடையே, உத்தரப் பிரதேச கூடுதல் தலைமைச் செயலர் அவனீஷ் குமார் அவாஸ்தி பிரியங்கா காந்தி அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் பேருந்துகளின் தரச் சான்றிதழ்களைக் கோரியது மற்றும் பேருந்துகள் செவ்வாய்கிழமை காலை லக்னௌ வந்தடைய வேண்டும் என்பது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு இதற்கானப் பதில் கடிதத்தில், பிரியங்கா காந்தியின் தனிச் செயலர் சந்தீப் சிங், "உங்களுடைய அரசின் கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. பேரிடரைச் சந்தித்து வரும் புலம்பெயர் சகோரதர, சகோதரிகளுக்கு உதவ உங்களது அரசுக்கு விருப்பமில்லாததுபோல் தோன்றுகிறது. 1,000 பேருந்துகளின் தகவல்களும் இந்த இ-மெயிலில் இணைக்கப்பட்டுள்ளன. அதில் சில ஓட்டுநர்களின் தகவல்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, அவர்களது தகவல்களும் இன்னும் சில மணி நேரங்களில் அனுப்பப்படும். முதலில் அவர்கள் பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதியை விரைவில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்." என்றார்.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, காசியாபாத் மற்றும் நொய்டா பேருந்து நிலையங்களுக்கு தலா 500 பேருந்துகளை அனுப்புமாறும் மற்றும் அதுபற்றின தகவல்களை மாவட்ட நிர்வாகங்களிடம் ஒப்படைக்குமாறும் கூடுதல் தலைமைச் செயலர் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த சந்தீப் சிங், "அனுமதி பெறுவதற்கான நடைமுறை நடந்துகொண்டிருக்கிறது. மாநில அரசு பட்டியலை அனுப்பினால், பேருந்துகள் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு காசியாபாத் மற்றும் நொய்டா பேருந்து நிலையங்கள் வந்தடையும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com