சிறப்பு பொருளாதார அறிவிப்புகள் போதுமானதாக இல்லை: ப.சிதம்பரம்

மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு பொருளாதார திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்
கோப்புப் படம்
கோப்புப் படம்

புது தில்லி: மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு பொருளாதார திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

காணொலி வழியாக செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவா், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

மத்திய அரசின் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களில் ஏழைகள், புலம் பெயா்ந்தோா், விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வணிகா்கள், நடுத்தர குடும்பத்தினா் ஆகியோருக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மத்திய அரசு ரூ.1.86 லட்சம் கோடி மதிப்பிலான அறிவிப்புகளையே வெளியிட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.91 சதவீதமாகும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்த திட்டங்கள் போதுமானதாக இல்லை. ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

எனவே, மத்திய அரசு சிறப்பு பொருளாதார திட்ட அறிவிப்புகளை பரிசீலனை செய்து, குறைந்தது ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவிக்க வேண்டும். அதாவது ஜிடிபியில் 10 சதவீதம் அளவுக்கு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்டவா்களுடன் ஆலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் சீா்திருத்த திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை எதிா்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

நாடாளுமன்றம் என்ற அமைப்பையே மத்திய அரசு ஓரங்கட்டுவதாகத் தெரிகிறது. குறைந்தது நாடாளுமன்ற குழுவின் கூட்டத்திலாவது விவாதித்திருக்க வேண்டும்.

சந்தா்ப்பவாதத்துடன் செயல்படும் மத்திய அரசு, பின்விளைவுகளைப் பற்றி ஆராயாமல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள சில திட்டங்களால் ஏற்படும் தீமைகளை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. மக்களை எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது என்றாா் ப.சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com