தமிழகம் உள்ளிட்ட 4 மாநில மக்கள் மே 31 வரை கர்நாடகத்துக்குள் நுழைய அனுமதியில்லை

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்,  மே 31-ஆம் தேதி வரை கர்நாடகத்துக்குள் நுழைய அனுமதியில்லை என முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா


பெங்களூரு: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்,  மே 31-ஆம் தேதி வரை கர்நாடகத்துக்குள் நுழைய அனுமதியில்லை என முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கடந்த சில நாள்களாக கர்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தவண்ணம் இருந்தது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வந்தோரால் கரோனா பரவுவது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம், கேரள மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கர்நாடகத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. 

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறியது: 
குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மே 31-ஆம் தேதி வரை கர்நாடகத்துக்கு வருகை தர அனுமதியில்லை. இம்மாநில மக்களை படிப்படியாக கர்நாடகத்துக்குள் அனுமதிப்போம். 

கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட 4 அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் செவ்வாய்க்கிழமை (மே 19) பேருந்து சேவைகளைத் தொடங்கும். ஆனால், அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 

அதிதீவிர பரவல் மண்டலங்களில் பொது முடக்கம் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும். பிற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கும். மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றார்.

இதனிடையே, உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை கூறுகையில், "மகாராஷ்டிரம், தமிழகம், குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை கர்நாடகத்துக்குள் அனுமதிப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க விரும்புகிறோம். 

இம்மாநிலங்களில் இருந்து வருகை தருவோரில் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் உள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com