மகாராஷ்டிர மேலவை உறுப்பினராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட 9 பேர், அந்த மாநில சட்ட மேலவை உறுப்பினர்களாக (எம்எல்சி) திங்கள்கிழமை பதவியேற்றனர்.
மும்பையில் உள்ள விதான் பவனில் சட்ட மேலவை உறுப்பினராக திங்கள்கிழமை பதவியேற்ற உத்தவ் தாக்கரே.
மும்பையில் உள்ள விதான் பவனில் சட்ட மேலவை உறுப்பினராக திங்கள்கிழமை பதவியேற்ற உத்தவ் தாக்கரே.



மும்பை: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட 9 பேர், அந்த மாநில சட்ட மேலவை உறுப்பினர்களாக (எம்எல்சி) திங்கள்கிழமை பதவியேற்றனர்.

தெற்கு மும்பையில் உள்ள விதான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்ட மேலவை தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பல்கர், தாக்கரே உள்ளிட்டோருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். தாக்கரேவுடன் சிவசேனை மூத்த தலைவர் நீலம் கோரே, பாஜகவைச் சேர்ந்த ரஞ்சித்சிங் மோஹித் பாட்டீல், கோபிசந்த் படல்கர், பிரவீண் தட்கே, ராமேஷ் கராட், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் ஷிண்டே, அமோல் மிட்கரி, காங்கிரஸின் ராஜேஷ் ரத்தோட் ஆகியோரும் மேலவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

முன்னதாக, இவர்கள் 9 பேரும் சட்ட மேலவைக்கு கடந்த 14-ஆம் தேதி போட்டியின்றி தேர்வாகினர். 

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பின்னர், சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. கூட்டணி அரசின் முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி பதவியேற்றார். அவர் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாததால், 6 மாதங்களுக்குள் பேரவை அல்லது மேலவையின் உறுப்பினராக வேண்டும். அவருக்கான 6 மாத கால அவகாசம் மே 27-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், சட்ட மேலவை உறுப்பினராக கடந்த 14-ஆம் தேதி தேர்வானார்.

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார். அவர், கூட்டணி அரசில் அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
ஆளுநருடன் சந்திப்பு: மேலவை உறுப்பினராக பதவியேற்ற பின்னர், ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை அவரது மாளிகையில் உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார். அப்போது, தாக்கரேவின் மனைவி ரஷ்மி, மகன் ஆதித்ய தாக்கரே, தலைமைச் செயலர் அஜய் மேத்தா ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com