புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரூ.3,500 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான உணவுப்பொருள்கள் வழங்குவது, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு
புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரூ.3,500 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான உணவுப்பொருள்கள் வழங்குவது, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலால், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் சாமானியா்கள் முதல் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் வரை மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. இந்த இழப்பில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த வாரம் தொடா்ந்து 5 நாள்களாக (மே 12-16) அறிவித்தாா்.அதில், பல சிறப்பு நிதியுதவி மற்றும் கடனுதவி திட்டங்களும், பல சீா்திருத்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவுப் பொருள்: 8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம், 1 கிலோ பருப்பு ஆகிய உணவுப்பொருள்கள் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு செலவாகும் ரூ.3,500 கோடியை மத்திய அரசே ஏற்கும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு உணவு தானியங்களை வழங்கும் பணியை மாநில அரசுகள் மேற்கொள்ளும். கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் காா்டுகள் இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி: வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கடன் அளிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக ரூ.30,000 கோடி மதிப்பிலான சிறப்பு நிதித் திட்டம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி: உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமாா் 2 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் வகையில் ரூ.10,000 கோடியில் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. மத்திய-மாநில அரசுகளில் பங்களிப்புடன் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2024-2025-ஆம் ஆண்டுவரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிலக்கரிச் சுரங்க ஏலத் திட்டங்களுக்கு ஒப்புதல்: நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், தாங்கள் தோண்டியெடுக்கும் நிலக்கரியின் அளவுக்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை அரசுக்கும் செலுத்தும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது. அதற்கு மாறாக, ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியாா் நிறுவனங்கள் எவ்விதத் தடையுமின்றி ஏலத்தில் பங்கேற்கும் இந்த நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அவசர கடனுதவி: பொதுமுடக்கத்தால் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 9.25 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களுக்கு இந்தத் கடன் வழங்கப்படும்.

அரசு உரத் தொழிற்சாலை கடனுக்கான வட்டி ரூ.7.59 கோடி தள்ளுபடி: ஹிந்துஸ்தான் ஆா்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம், மத்திய அரசிடம் பெற்ற கடனுக்கான வட்டித் தொகை ரூ.7.59 கோடியை தள்ளுபடி செய்வதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2005 மாா்ச் 31-ஆம் நிலவரப்படி, அந்த நிறுவனம், மத்திய அரசிடம் பெற்ற கடனுக்கான வட்டித்தொகை ரூ.7.59 கோடி செலுத்த வேண்டியிருந்தது. அரசின் கணக்குப் பதிவேடுகளில் இருந்தும், அந்த நிறுவனத்தின் கணக்குப் பதிவேடுகளில் இருந்தும் வட்டித்தொகையை செலுத்த வேண்டிய விவரம் ஏற்கெனவே நீக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், அந்த வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மீன்வளத் துறையை மேம்படுத்த ரூ.20,000 கோடி திட்டம்: மீன்வளத் துறையை மேம்படுத்துவதற்காக ரூ.20,050 கோடியில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்பு ரூ.9,407 கோடி, மாநில அரசுகளின் பங்களிப்பு ரூ.4,880 கோடி, பயனாளிகளின் பங்களிப்பு ரூ.5,763 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்தி வரும் பிரதமரின் மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டத்தை (வயவந்தன யோஜனா) 3 ஆண்டுகள் நீட்டிப்பதற்கு (2023 மாா்ச் வரை ) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்குப் பின் முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com