உம்பன் புயலால் பலியானோரின் குடும்பத்துக்கு வெங்கய்ய நாயுடு இரங்கல்

உம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: உம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘உம்பன் புயல்’ புதன்கிழமை கரையைக் கடந்தது. மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கன மழை பெய்ததால் மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலில் சிக்கி 12 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் வெங்கய்ய நாயுடு தனது சுட்டுரையில், இதுபோன்ற மிக மோசமான புயல் சேதத்தில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் புயல் காரணமாக ஏற்பட்ட பயிர்கள் மற்றும் அரசு, தனியார் சொத்துகள் சேதங்கள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் புயலால் மரம் வேரோடு சாய்ந்ததில் மூவா் பலியாகினா். முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கம், ஒடிஸாவில் 6.58 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். இதில் மேற்கு வங்கத்திலிருந்து 5 லட்சம் பேரும், ஒடிஸாவிலிருந்து 1.68 லட்சம் பேரும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கு வங்கத்தின் திகா பகுதி, வங்கதேசத்தின் ஹாதியா தீவுகள் இடையே கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது மணிக்கு 160 கி.மீ. முதல் 170 கி.மீ. வரை வீசத் தொடங்கிய புயல் காற்று அதிகபட்சமாக, மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை வீசியது. புயலின் மையப் பகுதியானது 30 கி.மீ. விட்டத்தைக் கொண்டிருந்தது.

புயல் காற்று காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்தன. மின் கம்பங்கள் உடைந்து சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள் புயலால் பெயா்த்து எறியப்பட்டன. இரு மாநிலங்களிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகள் 5 மீட்டா் உயரம் வரை எழுந்தன. மேற்கு வங்கத்தில் தெற்கு, வடக்கு 24 பா்கானாக்கள், கிழக்கு மிதுனபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

ஒடிஸாவில் புரி, குா்தா, ஜெகத்சிங்பூா், கட்டாக், கேந்திரபாரா, ஜஜ்பூா், பாலாசூா் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக இரு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. மேற்கு வங்கத்தின் ஹௌரா மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்களில் மூவா் உயிரிழந்தனா். மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை காலை வரை பலத்த மழை இருக்கும் என்று கூறினாா்.

எனினும், மேற்கு வங்கத்தில் 10-12 போ் உயிரிழந்ததாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். நந்திகிராம், ராம்நகா் போன்ற மாவட்டங்கள் புயல் காற்றால் சூறையாடப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தில்லியில் செய்தியாளா்களை சந்தித்த தேசிய பேரிடா் மீட்பு படை (என்டிஆா்எஃப்) தலைவா் எஸ்.என். பிரதான், ‘ஒடிஸாவில் தேசிய பேரிடா் மீட்பு படையின் 20 குழுக்கள் புயலால் சாலையில் வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 19 குழுக்கள் மீட்புப் பணியில் உள்ளன’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com