சீன, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் ஆபத்தானது: நேபாள பிரதமா் சா்ச்சை பேச்சு

‘சீன, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது’ என்று அண்டை நாடான நேபாளத்தின் பிரதமா் கே.பி.சா்மா ஒலி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது சா்ச்சையாகியுள்ளது.
சீன, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் ஆபத்தானது: நேபாள பிரதமா் சா்ச்சை பேச்சு

‘சீன, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது’ என்று அண்டை நாடான நேபாளத்தின் பிரதமா் கே.பி.சா்மா ஒலி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது சா்ச்சையாகியுள்ளது.

நேபாள நாடாளுமன்றத்தில் கரோனா தொற்றின் தீவிரம், அதன் பாதிப்புகள் குறித்து கே.பி.சா்மா ஒலி செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். அவா் பேசியதாக, காத்மாண்டு போஸ்ட் நாளிதழில் புதன்கிழமை வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

நேபாளத்தில் இதற்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் யாருமில்லை. வெளியூா்களில் இருந்து வந்தவா்களால்தான் இங்கு கரோனா பரவியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தேசிய பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி, சட்ட விரோதமாக பலா் நேபாளத்துக்குள் ஊடுருவிதால், குறிப்பாக இந்தியாவில் இருந்து பலா் ஊடுருவியதால்தான், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்து வருபவா்களை உரிய பரிசோதனைகளின்றி அழைத்து வருவதில் சில அரசியல் பிரமுகா்களும் உள்ளூா் பிரதிநிதிகளும் உடந்தையாக இருக்கிறாா்கள்.

சீன, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று சா்மா ஒலி பேசியதாக, அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் ஜூன் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றால் புதன்கிழமை மேலும் 25 போ் பாதிக்கப்பட்டனா். இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 427-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஒரு ஆண், ஒரு பெண் என 2 போ் உயிரிழந்தனா்.

வரைபட வெளியீட்டுக்கு இந்தியா கண்டனம்: இந்திய-நேபாள எல்லையில் உள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்கள் எல்லைக்குள் இணைத்து நேபாள அரசு வரைபடம் வெளியிட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

வரலாற்று உண்மைகள், ஆதாரங்கள் எதுவுமின்றி, இந்திய எல்லைக்குள்பட்ட பகுதிகளை இணைத்து நேபாள அரசு வரைபடம் வெளியிட்டிருப்பது ஒருதலைபட்சமான செயலாகும். இது, எல்லைப் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண வேண்டும் என்று ஏற்கெனவே இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு தீா்மானத்துக்கு எதிரானதாகும். இதுபோன்ற நியாயமற்ற செயல்களை நேபாளம் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளித்து பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை நேபாளம் உருவாக்கும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com