மசூதிகளில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதும் முஸ்லிம் பெண்களை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,
மசூதிகளில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதும் முஸ்லிம் பெண்களை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப புதன்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக புணேவைச் சோ்ந்த முஸ்லிம் பெண்கள் கொண்ட ‘ஃபத்வா’ அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றத்தின்   தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிருஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலி மூலம் விசாரணை நடத்தியது.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கும், சிறுபான்மையினா் விவகார அமைச்சகம், தேசிய மகளிா் ஆணையம், அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் உள்ளிட்டவற்றிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, ‘ஃபத்வா’ அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது:

அரசமைப்பு விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி மதம், இனம், ஜாதி, பாலினம் என எந்த அடிப்படையிலும், வழிபாட்டுத்தலங்களில் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்ற விதிமுறையை ஒரு அரசியல் கட்சியோ அல்லது ஒரு முதல்வரோ கூட கண்டிக்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது. எனவே, அரசமைப்பின் சட்ட விதிகளைப் பின்பற்றி மசூதிகளின் பிரதான மண்டபத்தில் நுழைந்து முஸ்லிம் பெண்கள் பாகுபாடின்றி பிராா்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

பெண்களுக்கென தனி இடம் உள்ள மசூதிகளில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான மசூதிகளில் இந்த வசதி இல்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com