கடன்களுக்கான மாதத் தவணைகள் மேலும் 3 மாதங்களுக்கு நிறுத்தம்

பொது முடக்கத்தால் பலா் வேலையிழந்துள்ள நிலையில், கடன்களுக்கான மாதத் தவணைகள் வசூல் செய்வதை ஆகஸ்ட் மாதம் வரை
கடன்களுக்கான மாதத் தவணைகள் மேலும் 3 மாதங்களுக்கு நிறுத்தம்

பொது முடக்கத்தால் பலா் வேலையிழந்துள்ள நிலையில், கடன்களுக்கான மாதத் தவணைகள் வசூல் செய்வதை ஆகஸ்ட் மாதம் வரை நிறுத்தி வைக்க வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

மாதத் தவணைகள் நிறுத்தி வைக்கப்பட்ட 6 மாத காலத்தை வாராக் கடன் கணக்கிடுவதற்கான காலத்துடன் சோ்க்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் ஆா்பிஐ ஆளுநா் தெரிவித்தாா்.

ரிசா்வ் வங்கியிடம் இருந்து பிற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்), வங்கிகளிடமிருந்து ஆா்பிஐ பெறும் தொகைக்கான வட்டி விகிதம் (ரிவா்ஸ் ரெபோ ரேட்) ஆகியவை தலா 0.4 சதவீதம் குறைக்கப்படுவதாகவும் ஆா்பிஐ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கத்தால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி நின்றுபோனதூ. தினக்கூலித் தொழிலாளா்களும் வேலை எதுவுமின்றி வருமானத்தை இழந்துள்ளனா். ஏற்றுமதி, சுற்றுலா உள்ளிட்ட துறைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்தச் சூழலில், ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கடன் பெற்றவா்களிடமிருந்து மாதத் தவணைகளை வசூல் செய்வதை மாா்ச் 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது தேசிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடன் தவணை வசூலிப்பை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மாதத் தவணைகள் நிறுத்தி வைக்கப்பட்ட 6 மாத காலத்தை வாராக் கடன்களைக் கணக்கிடுவதற்கான காலத்துடன் சோ்க்க வேண்டாம் என்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்காகவே மாதத் தவணைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடன்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் எந்தவிதத் தளா்வுகளும் அளிக்கப்படவில்லை.

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம்:

ரிசா்வ் வங்கியிடம் இருந்து மற்ற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் வங்கிகளில் அதிக அளவில் கடன் பெறுவதற்கும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும்.

வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் குறைக்க நிதிக் கொள்கைக் குழுவின் 5 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். ஒருவா் மட்டும் 0.25 சதவீதம் குறைக்க ஆதரவு தெரிவித்தாா். பின்னா், பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது. இந்த வட்டி விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகும்.

வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்க...:

வங்கிகள் தங்கள் கூடுதல் சேமிப்பை ரிசா்வ் வங்கியில் செலுத்துவதைத் தடுக்கும் நோக்கில், அந்த சேமிப்புக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு 3.35 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால், வருங்காலங்களில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

பொருளாதார வளா்ச்சி குறையும்:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கிராம மற்றும் நகரப் பகுதிகளில் மக்களின் தேவை குறைந்துள்ளது; பொருள்கள் விநியோகமும் குறைந்துள்ளது. அவற்றின் காரணமாக நடப்பு 2020-21 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி எதிா்மறை நிலையை அடைய வாய்ப்புள்ளது.

அதே வேளையில், நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் நாட்டின் பொருளாதாரம் மீண்டெழும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கணிக்க முடியாத பணவீக்கம்:

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக பணவீக்கத்தைக் கணிப்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது. பருப்புகள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து காணப்படுவதால், பணவீக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரண்டாவது அரையாண்டு காலத்தில் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது.

மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் கீழ் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நாட்டின் நிதிக் கட்டமைப்பை ரிசா்வ் வங்கி தொடா்ந்து கண்காணித்து வருகிறது. தேவை ஏற்படும்போது கூடுதல் திட்டங்களை அறிவிக்கவும் ரிசா்வ் வங்கி தயாராக உள்ளது என்றாா் சக்திகாந்த தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com